தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோருக்கே ஓட்டு: தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) எச்சரிக்கை

சென்னை, ஏப்ரல் 4, 2026: தமிழக தொழில்துறையினரின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாராக உள்ள அரசியல் கட்சிகளுக்கே வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) மாநில பொதுச்செயலாளர் எம். ஜெயபால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோருக்கே ஓட்டு: தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) எச்சரிக்கை
(Right) தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு (TAEF) மாநில பொதுச்செயலாளர் எம். ஜெயபால்

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாட்டிலேயே சுமார் 47 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், கடந்த ஒரு தசாப்தமாக போட்டி மாநிலங்களுக்கு இணையான தொழில் கொள்கைகள் அமல்படுத்தப்படாததால், உள்ளூர் தொழில்கள் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன.

தொழில்துறையின் வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக மூலப்பொருள் கிடைப்பது, மின்சாரச் செலவு குறைப்பு, போட்டித்திறன் வாய்ந்த தொழில் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் ஆதரவு ஆகிய நான்கு அம்சங்கள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.

மின்சாரம் மற்றும் மூலப்பொருள் தொடர்பான கோரிக்கைகள்:
மூலப்பொருட்கள் அனைத்துத் துறைகளுக்கும் சர்வதேச விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் மின்சார கட்டணம் பிற மாநிலங்களை விட அதிகமாக இருப்பதால் தொழில்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான தீர்வாக,
  • நிலை கட்டணம் மற்றும் டிமாண்ட் சார்ஜ் 50% குறைக்க வேண்டும்
  • 51 kW முதல் 150 kW வரை ஒரே கட்டண முறை கொண்டு வர வேண்டும்
  • LTCT உச்ச வரம்பை 150 kW இலிருந்து 200 kW ஆக உயர்த்த வேண்டும்
  • சோலார் மின்சார உற்பத்திக்கான நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
  • காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்திற்கு 15 நிமிட Time Block முறையை நீக்க வேண்டும்
மேலும், பகலில் உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்தை இரவில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். சொந்த பயன்பாட்டிற்கான மின் உற்பத்திக்கு விதிக்கப்படும் e-tax மற்றும் வீலிங் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழில் கொள்கை மாற்றம் அவசியம்:
போட்டி மாநிலங்களைப் போல தமிழக தொழில் கொள்கைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். அரசு அறிவிக்கும் மானியங்கள் அதே நிதியாண்டிலேயே வழங்கப்பட வேண்டும். தொழிற்பேட்டை நிலங்கள் வெளிப்படையான முறையில் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், NEEDS மற்றும் அண்ணல் அம்பேத்கார் கடன் திட்டங்களைப் போன்று, ஏற்கனவே தொழில் செய்து வரும் முனைவோர்களுக்கும் பொதுவான கடன் உதவி திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். MSME துறைக்கு தனி பட்ஜெட் ஒதுக்கி, அதில் ஏற்கனவே தொழில் செய்து வருவோருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான நல வாரியம் அமைத்தல், மாவட்ட வாரியாக தயாரிப்புகளை நேரடியாக சந்தைப்படுத்த வணிக வளாகங்கள் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

தொழிலாளர் நல கோரிக்கைகள்
தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகள் மாலை 6 மணிக்குப் பிறகே திறக்கப்பட வேண்டும். மேலும், பீகார், அசாம், ஒரிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் எச்சரிக்கை
தமிழக தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை ஏற்று தேர்தல் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கே 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என கூட்டமைப்பு தெளிவாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, மாநில அரசியல் சூழலில் தொழில்துறையினரின் செல்வாக்கை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai