பிளாஸ்டிக் மூலப்பொருள் விலை ஏற்றம்: ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு அச்சுறுத்தல் – தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (டான்பா) எச்சரிக்கை

சென்னை, ஏப்ரல் 4, 2026: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களும், பல லட்சம் தொழிலாளர்களும் கடுமையான வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாக தமிழ்நாடு–பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) தலைவர் ஜி. சங்கரன் தெரிவித்தார். சென்னை நகரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இதை கூறினார்.

பிளாஸ்டிக் மூலப்பொருள் விலை ஏற்றம்: ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு அச்சுறுத்தல் – டான்பா எச்சரிக்கை

சர்வதேச அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ஈரான்–இஸ்ரேல் மோதல், பிளாஸ்டிக் மூலப்பொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலுக்கு பின்னர், மூலப்பொருட்களின் கிடைக்கும்வாய்ப்பு குறைந்து, சந்தையில் தீவிர பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Press meet Youtube Video link 👇 

இதன் விளைவாக, பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் கிலோவுக்கு ரூ.100 ஆக இருந்த விலை, தற்போது ரூ.170 வரை உயர்ந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, “மெட்டீரியல் இல்லை” என்ற காரணத்தால் விநியோகம் தாமதப்படுத்தப்படுவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மூலப்பொருள் பெற முடியாததால், இடைத்தரகர்களை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக விலைக்கு பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்தியாவில் பெரிய அளவில் பிளாஸ்டிக் மூலப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இல்லாததும் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முழுவதும் தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலைமையால் பல சிறு மற்றும் குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் டான்பா சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விலை குறைப்பிற்கு இணையாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களும் விலை குறைக்க மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூலப்பொருட்களை உற்பத்தியாளர்கள் நேரடியாக சிறு தொழில்களுக்கு வழங்கும் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், கள்ளச்சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு விலை கட்டுப்பாடு முறை கொண்டு வரவும், அரசின் முன் அனுமதி இன்றி விலை உயர்த்த முடியாத வகையில் சட்டம் இயற்றவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கூடுதலாக, இப்பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

சிறு மற்றும் குறு தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கி, மாதத்திற்கு 20 டன்களுக்கு குறைவாக மூலப்பொருள் வாங்கும் நிறுவனங்களுக்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக டான்பா சங்கம் எச்சரித்துள்ளது.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai