Bharati 100:Events to commemorate 100th year of passing away of Mahakavi Bharati by Vanavil Cultural
சென்னை, செப்டம்பர் 09, 2021: சென்னை வானவில் பண்பாட்டு மையம் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டு தொடர் நிகழ்ச்சிகளைநாடு முழுவதும் நடத்தவுள்ளது. இத்தொடர் நிகழ்ச்சிகள் குறித்துத் தெரிவிப்பதற்காகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
Dr எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் Dr .சுதா சேஷய்யன், மூத்த எழுத்தாளர்கள் திருமதி சிவசங்கரி, திரு, மாலன் ஆகியோர் மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டுத் தொடர்நிகழ்ச்சிகள் குறித்து விரிவாகத் தெரிவித்தனர்.
Youtube Video👇👇
அப்போது அவர்கள் பேசியதாவது:
புதிய அறம் பாடவந்த அறிஞன் என்று பாவேந்தர் பாரதிதாசனால் போற்றப்பட்ட ஆசான் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் தம்முடைய பூத உடலை நீத்த நாளின் நூற்றாண்டு தினம் அமைந்துள்ள இவ்வாண்டு சென்னை வானவில் பண்பாட்டு மையம் மகாகவிக்குப் புகழஞ்சலி செலுத்தும் விதமாக 'பாரதி நூற்றாண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் என்று வடிவமைத்து நடத்துகின்றது. இந்த நூற்றாண்டு நிகழ்ச்சிகள் குறித்து விளக்குகின்றோம்
மகாகவி பாரதி இறந்த நாள் செப்டம்பர் என்று சிலரும் செப்டம்பர் 12 என்று சிலரும் விவாதித்து வருகின்றனர். அவர் இறந்தது செப்டம்பர் 11 நள்ளிரவுக்குப் பிறகு ஆனால் செப்டம்பர் 12 காலை சூரிய உதயத்திற்கு முன்பாகும். சூரிய உதயம்தான் மறுநாள் என்று கணிக்கின்ற ஒரு மரபு உண்டு. அம்மரபின்படி பார்த்தால் அவர் மறைந்தது செப்டம்பர் 11 எனலாம். அவ்வாறே 80 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் அவரின் நினைவுநாளை செப்டம்பர் 11 என்று குறிப்பிட்டு நினைவஞ்சலி செலுத்தி வருகிறோம். ஆனால் செப்டம்பர் 11 நள்ளிரவிற்குப்பின் என்று கணக்கிடும்போது ஆங்கில மரபுப்படி பாரதியின் மறைவு நாள் செப்டம்பர் 12 என்றாகிறது. நாம் குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தவேண்டும் என்று திட்டமிட்டபடி 2021 செப்டம்பர் 11ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தின் மேதகு ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மகாகவியைப் போற்றி உரையாற்றுகிறார் தொடர்ந்து பாரதியின் பாடல்களைப் பாடி பாரதிக்கு அனைவரும் அஞ்சலி செலுத்துவர்.
பாரதி நினைவுநாள் நூற்றாண்டு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டு நிகழ்ச்சிகளை பாரதி சுடர் ஏற்றித் தொடங்கி வைக்கவுள்ளார். ஏற்றிய பாரதி சுடரை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வானவில் பண்பாடு மைய நிறுவனர் வழக்கறிஞர் வானவில் திரு. கே ரவி அவர்களிடம் வழங்கவுள்ளார். இந்திய அரசின் பண்பாடு, நாடாளுமன்ற விவகாரம் துறைகளின் மாநிலங்களுக்கான அமைச்சர் மாண்புமிகு திரு.அர்ஜூன் ராம் மெஹ்வால் வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிகளின் ஒரு முக்கிய அம்சமாக, நமது பாரத தேசத்திற்கு ஒரு கொடையாக வானவில் பண்பாட்டு மையம் வழங்குவது மகாகவி சுப்ரமணிய பாரதியின் 'செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் 'என்ற பாரதியின் அமரவரி, தமிழிலும் பதினெட்டு மொழிகளிலும் ஒலிக்கும் இசைப்பேழையாகும். இந்த மகாவாக்கியத்தை தமிழ் தவிர இன்னும் பதினெட்டு மொழிகளில் அந்தந்த மொழி வல்லுநர்களால், குறிப்பாக சிலமொழிகளில் 'சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆற்றலாளர்களால், கவிதையாகவே மொழிபெயர்க்கப்பட்டு, அவ்வரிகளுக்கு அந்தந்த மொழிகளின் மண்வாசனைத் தூவலோடும் துள்ளலோடும் திரு அருண் பிரகாஷ் அவர்கள் இசையமைக்க, அந்தந்த மொழியினர் பாடுவது போல அனுபவித்துக் குரலினிமையுடன் பிரபல பாடகி திருமதி. அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கிறார். 'செப்புமொழி பதினெட்டுடையாள் என்னும் இவ்விசைப்பேழையை சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிடவுள்ளனர்.
திரு. அருண்ப்ரகாஷ் மற்றும் திருமதி. அனுராதா ஸ்ரீராம் ஆகியோரை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கௌரவித்து, நிகழ்ச்சியில் மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டுத் தொடக்கவுரை ஆற்றுகிறார்.
தொடர்ந்து பாரதி 100 நினைவுநாள் நூற்றாண்டு நிகழ்ச்சிக் குழுவின் தலைவரும், Dr எம்.ஜி ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான டாக்டர் திருமதி சுதா சேஷய்யன் அவர்கள் 'பாரதி 100' என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் குறித்து விளக்கவுரை ஆற்றுகிறார். நிகழ்ச்சி தொடக்கத்தில் வானவில் பண்பாட்டு மையத் தலைவரும், சென்னை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வருமான திரு. வ. வே.சு. அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். இந்த நாளின் சிறப்பு நிகழ்ச்சிகளாக பாரதி இல்லத்தில் சிறுவர்கள் சேர்ந்திசையாக 'பாரதி ஐந்து என்னுந் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியின் இரத்தின வரிகளைப் பாடுவார்கள். தொடர்ந்து 'யாமறிந்த மொழிகளிலே' என்னும் தலைப்பில் நடன நிகழ்ச்சி நடைபெறும். அன்று நண்பகல் 12 மணியளவில் 'சொல்வேந்தர் கலைமாமணி திரு சுகி சிவம் அவர்கள் 'கவிதை முதல் கப்பல் வரை' என்ற தலைப்பில் மகாகவி பாரதியையும் கப்பலோட்டிய தமிழர் வ உ சி யையும் இணைத்து உரையாற்றவிருக்கின்றார். சுதந்திரப் போராட்ட வீரர் 'செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்கள் பிறந்த 150ஆம் ஆண்டில் அவரைப் போற்றும் விதமாகவும் இப்பொழிவு அமைகின்றது,
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்றி வழங்கிய பாரதி சுடரை வானவில் பண்பாடு மைய நிறுவனர் வழக்கறிஞர் வானவில் திரு. கே ரவி அவர்களும், வானவில் பண்பாட்டு மைய உறுப்பினர்களும், இசை, நடனக் கலைஞர்கள் என் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசத்தலைநகர் தில்லிக்கு ஏந்திச் செல்கின்றனர். இம்மாதம் 15ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாராளுமன்றத்தில் பாரதி' என்னுந் தலைப்பில் பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை மத்திய அரசின் பண்பாட்டுத் துறையும், அவ்வமைப்பின் அங்கமான தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர், இந்திராகாந்தி தேசியக் கலை மையம், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து வானவில் பண்பாட்டு மையம் நடத்தவுள்ளது. இம்மாபெரும்நிகழ்ச்சியில் நமது தேசத்திலுள்ள மக்களின் சார்பில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மேதகு எம். வெங்கய்யா நாயுடு அவர்கள் மகாகவி நமது பாரதிக்குப் புகழஞ்சலி செய்யவுள்ளார். மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற ஊக்கமும், உறுதுணையும் வழங்கிய மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள், பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அர்ஜுன்ராம் மேக்வால் அவர்களும் , மணிப்பூர் மாநில ஆளுநர் மேதகு இல.கணேசன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசவுள்ளார்
மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் மேதகு எம். வெங்கய்யா நாயுடு அவர்கள் 'பாரதியின் மரபுச் சுடர் பாரதியின் கொள்ளுப்பேரன் திரு. ராஜ்குமார் பாரதி அவர்களுக்குப் பதக்கம் அணிவித்து ராட்டுப் பாத்திரம் வழங்கிப் போற்றுகின்றார். பதினெட்டு மொழிகளில் உருவான 'செப்புமொழி பதினெட்டுடையாள் இசைப்பேழைக்கு இசையமைத்த திரு. அருண் ப்ரகாஷ் அவர்களும், அந்தந்த மொழி வல்லுனர்களிடமிருந்து கவிவரிகளின் மொழிபெயர்ப்பைப் பெற்று இவ்விசைப்பேழை உருவாக ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட பன்மொழிப் புலவர் முனைவர் திரு. எழில்வேந்தன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் அவர்களால் கௌரவிக்கப் படுகின்றனர்
தொடர்ந்து 60 சிறுவர்கள் பாரதியின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியும், 25 நடனக் கலைஞர்களின் பாரதி பாடல் வரிகளுக்கான 'தோள்கொட்டுவோம்' என்ற தலைப்பிட்ட நடன நிகழ்ச்சியும் விழா அரங்கில் நடைபெறும். இசைக்கலைஞர் கலைமாமணி Dr சுதா ரகுநாதன் அவர்கள் பாரதி பாடல்களைப் பாடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முனைவர் திருமதி..பர்வீன் சுல்தானா அவர்கள் 'சிந்தனை ஒன்றுடையாள்' என்னுந் தலைப்பில் பேருரை ஆற்றவுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் மகாகவி வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாக சிறப்புக் கண்காட்சி அமைக்கப்படவுள்ளது. தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி மத்திய அரசு நடத்தும் 'ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' என்னும் இந்திய சுதந்திர பவளவிழா ஆண்டுக்கு கொண்டாட்டங்களின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பாரதியாரின் பாதச் சுவடுகள்பட்ட இடங்களிலெல்லாம், அதாவது பாரதியார் எங்கெங்கு சென்றுள்ளார் என்று வரலாற்றில் எழுதப்பட்டுள்ளதோ அவ்விடங்களிலெல்லாம் வானவில் பண்பாட்டு மையம் பாரதி நூற்றாண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.
பாரதியார் பிறந்த எட்டயபுரம், அவரின் திருமணம் நடந்த கடையம், அவர் பயின்ற திருநெல்வேலி, அவர் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை, நான்கு ஆண்டுகள் அவர் கல்லூரியில் பயின்ற காசி, சகோதரி நிவேதிதாவை அவர் சந்தித்து தன் குருமணியாக ஏற்ற கல்கத்தா, மனைவி திருமதி செல்லம்மா பாரதியுடன் பார்த்த மிருகக்காட்சி சாலை அமைந்த திருவனந்தபுரம், அவர் சிலகாலம் சிறையிருந்த கடலூர், அவர் இந்து அபிமான சங்கத்தில் உரையாற்றிய காரைக்குடி, அவர் மறைவதற்குமுன் 'மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் நிறைவான உரையாற்றிய ஈரோடு, பத்தாண்டுக் காலம் தங்கியிருந்து மிக அரிய பொக்கிஷங்கள் அவர் வழங்கிய புதுச்சேரி ஆகிய இடங்களில் பாரதி நினைவுநாள் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இறுதியாக டிசம்பர் 11 அன்று பாரதி பிறந்தநாளன்று ஜதி பல்லக்கு ஊர்வலத்தோடு சிறப்பு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறும். இதில் பட்டியலிட்டபடி இவ்வாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதிவரை நம் மகாகவியைப் போற்றி வணங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
குறிப்பாக காசியில் நடைபெறவுள்ள பாரதி நினைவுநாள் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்று மகாகவிக்கு அஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்ற அந்நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் நம் பாரதப் பிரதமருமான மாண்புமிகு உயர்திரு நரேந்திர மோதி அவர்களுக்கும், புதுச்சேரி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு உயர்திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும் வானவில் பண்பாட்டு மையம் அழைப்பு விடுத்துள்ளது,
இவ்வாறு பெரியவர்கள் முதல் இளைஞர், சிறுவர், சிறுமியர் என்று பலர் நேரில் வந்து மகாகவிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளாக மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து அனைவரும் படித்து, பார்த்து மகிழும் வண்ணம் வெளியிட ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்
நன்றி
அன்புடன்
டாக்டர் சுதா சேஷய்யன்
செயற்குழுத் தலைவர்
பாரதி 100
No.1A. Stone Link Avenue, Raja Andamalalpuram, Chennai 600028
Phone No.044 24350506 -
Email: mksb2012@gmail.com
****