பாரதிய ஜனதா கட்சியின் புல்டோஸர் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்டம்


சென்னை, ஜுன் 15, 2022: பாரதிய ஜனதா கட்சியின் புல்டோஸர் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ம. முகமது கவுஸ், ஒருங்கிணைப்பாளர், சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், ஆர்.கே.ஜலில், ஒருங்கிணைப்பாளர், சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், சுப்பிரமணி ஆறுமுகம், தேசிய பொது செயலாளர், வெல்ஃபேர் கட்சி, விக்ரமன், மாநில செய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆலிம் அல்பஹாரி, சிறுபான்மை பிரிவு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பாலகிருஷ்ணன், ஐக்கிய விவசாயிகள் முன்னனி மற்றும் லயோலா மணி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube Video👇👇

அப்போது அவர்கள் பேசியதாவது: வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து 2014ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையை நோக்கியே பயணித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு, மதச்சுதந்திரம் பறிப்பு என பல்வேறு தளங்களில் இந்தியா படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவற்றை மறைப்பதற்காக வேண்டியும் ஆர்எஸ்எஸ் சங்பரிவாரின் மைய நோக்கமான இந்து ராஷ்டிராவை உருவாக்கும் பொருட்டும் இந்தியாவில் மத ரீதியான மோதல்களையும் சிக்கல்களையும் அதிகரிப்பதில் ஒன்றிய அரசு அதிக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. சாமியார்களின் சன்ஸ்தான்களின் ஊடாக இனப்படுகொலைக்கான கூக்குரல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ராம் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்ற நிகழ்வுகளின் நடத்தப்படும் ஊர்வலங்களில் மூலம் முஸ்லிம் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. சங்பரிவார் கும்பல்கள் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு எதிராக எதிர்வினையாற்றும் முஸ்லிம்களின் இருப்பிடங்கள் நேரடியாக அரசால் இடித்து தள்ளப்படுகிறது. ஆக்கிரமிப்பு என்ற பெயரால் இது போன்ற சட்ட விரோத செயல்கள், அரச பயங்கரவாதங்கள் அரங்கேற்றப்படுகிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நுபுல் சர்மா என்பவர் நபிகளாரை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். அதைத்தொடர்ந்து நவீன் ஜிண்டால் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் அதை பகிர்ந்துள்ளார். இதை கண்டித்து அரபு நாடுகள் தங்கள் கண்டளத்தை தெரிவித்துள்ளன. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் நுபுல் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனநாயக முறைப்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை பாசிச பாஜக அரசுகள் காவல்துறையை பயன்படுத்தி மிக மோசமாக எதிர்கொண்டுள்ளனர். இருவர் காவல்துறையினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பலரும் சிறையில் உள்ளனர்.

அலகாபாத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னணியாக இருந்தார் என்று கூறி வெல்ஃபேர் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜாவித் முஹம்மதை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முரணான முறையில் கைது செய்து கொண்டு சென்றனர். அவரது மனைவி மற்றும் மகளையும் காவல்துறை கைது செய்தது. பிறகு சட்டவிரோதமான முறையில் அவரது இல்லம் இடித்துத் தள்ளப்பட்டது. சனிக்கிழமை இரவு அறிவிக்கை கொடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை இடித்துள்ளனர். ஜாவித் முஹம்மதின் வீட்டிலிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொய்த் தகவல்களையும், காவல்துறை பரப்பி வருகிறது.

இதற்கெதிராக வெல்ஃபேர் கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. பாசிச பாஜகவின் இந்த தேச, சட்ட, சிறுபான்மை விரோத நடவடிக்கைகள் இந்தியாவிற்கு மென்மேலும் இழிவையே கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து சட்ட அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக கூறினார்கள்.

****

Recent Posts