டிசம்பர் 7- ல் கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள் மாநில கோரிக்கை மாநாடு: தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
சென்னை, டிசம்பர் 4, 2021: டிசம்பர் 7- ல் கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள் மாநில கோரிக்கை மாநாடு நடத்தப்படும் என்று தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.இரவி தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பேட்டியின்போது மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் ஏ எஸ் கண்ணன் எக்ஸ் எம்எல்ஏ, வரவேற்புக் குழு செயலாளர் ஆர் துரைசாமி, மத்திய சென்னை மாவட்ட ஏஐடியுசி செயலாளர் மு சம்பத், வடசென்னை மாவட்ட ஏஐடியுசி தலைவர் எஸ் குப்பன் ,வடசென்னை மாவட்ட கட்டட சங்க மாவட்ட செயலாளர் ஏ அருள், மத்திய சென்னை மாவட்ட கட்டட சங்க நிர்வாகிகள் பெர்லின், சாக்ரடீஸ். ஆகியோர் உடன் இருந்தார்கள்
Youtube Video👇👇
அப்போது மேலும் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு கட்டட கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் 1982ல் சட்டம் இயற்றப்பட்டு, 1996ல் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
1982ம் வருடத்திய சட்டத்தின் நோக்கங்களும், நலவாரியத்தின் திட்டங்களும் பெருமளவில் செயல்படுத்தப்படவில்லை.
நலவாரியத்தில் ரூபாய் 4000 கோடிக்கு மேல் நிதி இருப்பில் இருந்தும் நலத்திட்ட உதவிகள் போதுமான அளவுக்கு உயர்த்தப்படவில்லை.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் எந்தவிதமான அதிகாரமும் இல்லாத அமைப்பாகவும் அரசின் ஒரு இலாகா பிரிவாகவும் செயல்படுகிறது. கடந்த காலங்களில் நலவாரியத்தில் முடிவெடுக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் அரசு ஒப்புதல் அளிக்காததால் நடைமுறைப்படுத்தப்படாமல் போய்விட்டன.
உதாரணமாக கடந்த 16.09.2019ல் நடைபெற்ற 30வது கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியக் கூட்டத்தில்,
கல்வி உதவித் தொகை வருடத்திற்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் ரூ.1800, 6ம் வகுப்புலிருந்து 9ம் வகுப்புவரை ரூ2400, 10ம் வகுப்பு பயில மற்றும் தேர்ச்சிக்கு தலா ரூ.2400, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயில மற்றும் தேர்ச்சிக்கு தலா ரூ.3400, முறையான பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில ரூ10,000, தொழில் சார்ந்த பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு பயில அரசு நிருணயிக்கும் கல்விக்கட்டணம் முழுவதும் வழங்கப்படும் என்றும், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் பயில ஆண்டுதோறும் அரசால் நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம்
30வது நலவாரியக் கூட்டத்தில், உதவித் தொகையாக வழங்கிட 10.03.2020 அன்று முடிவெடுக்கப்பட்டது. பதிவு பெற்ற பெண் தொழிலாளர்க்கு மகப்பேறு கால உதவி நிதி ரூ.25.000 மற்றும் பதிவு பெற்ற ஆண் தொழிலாளியின் மனைவிக்கு பேறுகால உதவி நிதி 20.000, திருமண உதவி நிதி ரூ.50,000, இயற்கை மரண உதவி நிதி ரூ.2 லட்சம், பணி இடத்திற்கு வெளியே நடைபெறும் விபத்தில் மரணமடையும் --தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் என்றும், 30வது மற்றும் 31வது நலவாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அரசு ஒப்புதல் தராமலேயே காலம் கடத்தியது. அடுத்து நடைப்பெற்ற சட்டமன்றப் பொது தேர்தலில் தோல்விகண்டது. அடுத்து வந்த தி.மு.க. தலைமையிலான அரசு அமைத்த நலவாரியம் கடந்த 6 மாதங்களாக கூட்டப் படாமலிருந்து தற்போது வரும் 12.12.2021 அன்று கூட்டப்பட உள்ளது.
'தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு முத்தரப்புக் குழுவால் மட்டுமே கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கங்களையும், நலவாரியத்தின் திட்டங்களையும் பலன்களையும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அளித்திட முடியும்.
பல லட்சக் கணக்கான தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது சமூகத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கும் சூழலை வலிமைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு கட்டட கட்டுமானத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசுக்கு முன் வைக்கவிருக்கிறோம்.
எங்களது கோரிக்கைகளுக்கும், அரசின் நிதி நிலைக்கும் மற்றும் (வெள்ளை.அறிக்கைக்கும்) தொடர்பு ஏதுமில்லை. கட்டுநர்களிடமிருந்து எங்களின் நலன்காக்க.வசூலிக்கப்படும் நலநிதியிலிருந்து மட்டுமே எங்களுக்கான நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதே வேளையில் நலத்திட்ட உதவிகள் எங்களுக்கு உரியகாலத்தில் வழங்கப்படுவதில்லை. தேவையற்ற காலதமதமும் அலைக்கழிப்பும். எல்லா காலத்திலும் தொடர்கிறது. கிராம நிருவாக அதிகாரிகளின் அலட்சியமும், அலைக்கழிப்பும், எதிர்பார்ப்புகளும் எங்களை துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
தொழிலாளர் துறை அதிகாரிகள் நலவாரியத் திட்டங்களின் எங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு பதிலாக மறுப்பதிலும் கிடப்பில் போடுவதிலும் எப்போதும் கவனமாக இருக்கின்றனர். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம். எங்களது கோரிக்கைகளில் நலவாரியப்பதிவு, புதுப்பித்தல், கேட்புமனுக்களை உடனடியாக ஏற்று பலன்களை வழங்க கணினி மயமாக்கப்பட்டுள்ள போதிலும் அவை எளிமைப்படுத்தப்படவில்லை. அவைகளை சீர்படுத்தி செம்மைப்படுத்துவதற்கு அரசு முன்வர வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர்களும் தனிக்கவனம் செலுத்தி ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
****
****