தேசிய பால் தின விழா: வெண்மைப் புரட்சியின் வேந்தர் விருது 2024 மற்றும் பால்வளத்துறைக்கான அறக்கட்டளை துவக்க விழா
சென்னை, நவம்பர் 26, 2024: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் - தொழிலாளர்கள் - பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய பால் தின நாளில் வெண்மைப் புரட்சியின் வேந்தர் விருது 2024 மற்றம் பால்வளத்துறைக்கான அறக்கட்டளை துவக்க விழா நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அவருடன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் 26.11.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய பால் தின விழாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் பால் முகவர்களுக்கு வெண்மைப் புரட்சியின் வேந்தர் 2024 விருதுகள் வழங்கப்பட்டன. மற்றும் பால்வளத்துறைக்கான அறக்கட்டளையும் துவங்கப்பட்டது.
Press meet Youtube Video 👇
தேசிய பால் தின விழா தீர்மானங்கள்:
வெண்மைப் புரட்சியின் தந்தை " டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட மத்திய அரசை கோரும் தீர்மானம்:
நம் தேசத்திற்காக அளப்பரிய சேவையாற்றியவர்களையும், கலை, இலக்கியம் அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களையும் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் "இந்திய மாமணி" பாரத ரத்னா எனும் உயரிய விருது வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.
மேலும், நம் தேசத்தின் வளர்ச்சியை மூச்சாகக் கொண்டு பாடுபட்டவர்களை மத்திய அரசு உரிய நேரத்தில் கௌரவித்து வந்தாலும் கூட விவசாயம் சார்ந்த, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் பிடித்ததற்கும், பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக திகழவும் காரணமான "வெண்மைப் புரட்சியின் தந்தை" டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களுக்கு இதுவரை "பாரத் ரத்னா விருது வழங்கப்படாதது மிகுந்த வருத்தத்திற்குரியது.
ஆனால் இதே "பசுமைப் புரட்சியின் தந்தை" என்றழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், முன்னாள் பாரத பிரதமர் திரு. சௌத்ரி சரண்சிங் அவர்களுக்கும் விவசாயம் சார்ந்த செயல்பாடுகளுக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதோடு, தொழில் துறையில் சிறந்து விளங்கியமைக்காக மறைந்த தொழிலதிபர் திரு ரத்தன் டாடா அவர்களுக்கும் கூட நம் தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயத்தோடு தொடர்புடைய, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கக் கூடிய பால் உற்பத்தியில் மாபெரும் புரட்சி செய்ததோடு மட்டுமின்றி கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழும் அமுல் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு பால் நிறுவனங்களின் தந்தையாகவும், அடையாளமாகவும் விளங்கும் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களுக்கு நம் தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை முன் வைத்தும் கூட அதனை மத்திய அரசு பரிசீலிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.
உலகத்தின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தற்போது 25% பங்களிப்போடு இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக முதலிடம் வகிக்கிறது என்றால் அது டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் செயலால் மட்டுமே என்பதால் வரும் 2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில் நம் இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களுக்கு நம் தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தியும், தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
"கூட்டுறவு பால் நிறுவனங்களின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களுக்கு ஆவின் இல்லத்தில் சிலை வைக்க தமிழ்நாடு அரசை கோரும் தீர்மானம்
அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றதில் நம் தென்னிந்தியாவின் கேரளாவைச் சார்ந்த டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பங்கு அளப்பரியது.
விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களின் நலன் குறித்தும், பால் உற்பத்தியில் இந்தியாவு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிடவும் சிந்தித்து இந்தியாவில் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி மாநில அரசுகள் சார்பில் கூட்டுறவு பால் நிறுவனங்கள் உருவாக காரணகர்த்தாவாகவும், முன்னோடியாகவும் டாக்டர் வாகீஸ் குரியன் அவர்கள் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் வெண்மைப் புரட்சிக்கு மட்டுமல்ல கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கும் தந்தையாக டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள் திகழ்ந்து வருவதால் அவரை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் மறப்பது நன்றன்று.
எனவே பால் கூட்டுறவுகளின் முன்னோடியாகவும், கூட்டுறவு பால் நிறுவனங்களின் வழிகாட்டியாகவும் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள் இருப்பதால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்ல வளாகத்திலும், சென்னை, மாதவரம் பால் பண்ணையில் உள்ள பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் அலுவலகத்திலும் தாய்ப்பசு, கன்றுக்குட்டியோடு டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள் இருப்பது போன்ற திருவுருவ சிலை அமைத்திட ஆவண செய்யுமாறு தமிழ்நாடு அரசையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. மு க ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் கேட்டுக் கொண்டு இந்த சிறப்புதீர்மானம்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய தினங்களுக்கு வாழ்த்துச்செய்தி தீர்மானம்
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறை தொடங்கிய காலத்திலிருந்தே தேசிய பால் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கும், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட நாட்களுக்கும் வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறை இருந்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தேசிய பால் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வரும் நடைமுறையை முற்றிலுமாக நிறுத்தி இருப்பது ஏற்புடையதல்ல.
எனவே பாலுற்பத்திக்கு அடையாளமாக திகழும் தேசிய பால் தினம் மற்றும் தேசத்தின் அடையாளமான சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும்
பால் முகவர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கிட கோரும் தீர்மானம்
அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான பால் நிறுவனங்கள் இனிப்புகள், பெயரளவிற்கான பரிசுப் பொருட்கள் வழங்குவதையும், சில பால் நிறுவனங்கள் பால் முகவர்கள் கடந்த காலங்களில் கொள்முதல் செய்த பால், தயிர் அளவில் லிட்டருக்கு 10காசுகள் வீதம் கணக்கிட்டு போனஸ் என்கிற பெயரில் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. இது பால் முகவர்கள் மற்றும் பால் நிறுவனங்களுடனான அன்பை பரிமாறிக் கொள்வது போல் இருந்தாலும் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வரும் பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை எந்த வகையிலும் மேம்படுத்த உதவாது.
எனவே ஒவ்வொரு பால் நிறுவனங்களும் தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு மாத ஊதியத்தையோ அல்லது மாத ஊதியத்தை ஆண்டு கணக்கில் சதவிகித அடிப்படையில் கணக்கிட்டோ போனஸாக வழங்கி வருவது போல் ஒவ்வொரு பால் முகவர்களும் மாதந்தோறும் பெறுகின்ற ஊக்கத்தொகையை ஆண்டு கணக்கில் கணக்கிட்டு அதன் சராசரியை அடிப்படையாக கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாத ஊக்கத்தொகையை பால் முகவர்களுக்கு போனஸாக வழங்கிட வேண்டும்.
****