பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனமும் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸூம் இணைந்து 50 எழுத்தாளர்களின் (மூத்த குடிமக்கள்) 62 புத்தகங்கள் வெளியீட்டு விழா
"வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பட்டியலில், அடுத்து புத்தகச் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மனதில் நிறுத்தி, புத்தக வாசிப்பை மேம்படுத்த புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய பணியை செவ்வனே செய்பவர்கள் 'பேக்கிடெர்ம் டேல்ஸ்' நிறுவனத்தினர்.
அதன் நிறுவனர் டாக்டர் லட்சுமி பிரியாவும் இணை இயக்குனர் உமா அபர்ணா அவர்களும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் என எழுத்தாற்றல் உள்ளவர்களை புத்தகங்கள் எழுத வைத்து, இதுவரை சுமாராக 700 எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். அதை கோர்வையாக எழுத வைத்து, அதற்கு வடிவம் தந்து, அழகிய புத்தகமாக வெளியிடும் வரை பேக்கிடெர்ம் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது. கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த சூழலில் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை, அறிந்த சில தகவல்களை கதைகளாக அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று டாக்டர் லட்சுமி பிரியா எண்ணினார். அந்த பொறுப்பை ஏற்ற துணை நிறுவனர் உமா அபர்ணா, எழுத்தாற்றல் உள்ள மூத்த குடிமக்கள் சிலரை இணைத்து சிறு கதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டார். அந்த சிறு விதை மரமாகி இன்று கிட்டத்தட்ட 64 புத்தகங்களின் விபரங்கள் 'உலக புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'க்கு அனுப்ப பட்டது. 52 எழுத்தாளர்களுக்கு 'உலக புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' நிறுவனம் ஆகஸ்ட் 18 ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் சான்றிதழ் வழங்கியது. பேக்கிடெர்ம் நிறுவனம், புஸ்தகா பப்ளிகேஷன் மூலம் வெளியிட்ட பதினாறு மூத்த குடிமக்கள் ஒரு வருடத்தில் எழுதிய பதினாறு தொகுப்பு நூல்களும் அதில் அடங்கும்.அந்த புத்தகங்களில் உள்ள கதைகள் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தியும், குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை கதை வடிவில் எடுத்து இயம்புவதாகவும், நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வெளி உலகிற்கு அறிமுகம் இல்லாத விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.அது மட்டும் அல்லாமல் பல ஆலயங்களின் சிறப்புகளையும் , ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய குறிப்புகளையும் கதை வடிவில் தொகுத்து அளித்துள்ளனர். ஒருவருடைய அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டி. அவ்வகையில் பேக்கிடெர்ம் வெளியிடும் இந்த புத்தகங்கள் பொக்கிஷமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கதைகள் எளிமையான நடையில் உள்ளதோடு மட்டும் அல்லாமல் நமது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்த உதவும் என்பது உறுதி. நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் இணைக்கும் கதவுகளாகவும் இந்த புத்தகங்கள் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
****