SDPI கட்சியின் 2024 ஆம் ஆண்டின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா
- சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு!
- கேப்டன் விஜயகாந்த், விஐடி பல்கலை., துணைவேந்தர் முனைவர் விஸ்வநாதன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்களுக்கு விருது
சென்னை ஜூலை 13, 2024: எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 7 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் (2024) சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள பைஸ் மஹாலில் இன்று (ஜூலை.13) மாலை நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
-----------------------------------------------------
Youtube Video link 👇
-----------------------------------------------------
மேலும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தீன், மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.ஷபீக் அஹம்மது, முகமது ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், எஸ்டிபிஐ கட்சியின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, சலீப் ஜாஃபர், பூட்டோ மைதீன், சீனி முகமது, முகமது பிலால், முகமது சலீம், செய்யது அஹமது, அப்துல் ரசாக், மாலிக், ஜூபைர் அலி, ஜாஃபர் ஷெரீப் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கான விருதினை தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராசர் விருதினை விஐடி பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் திரு ஜி.விஸ்வநாதன் அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருதினை திரைப்பட இயக்குநர் தோழர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருதினை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்களுக்கும், கவிக்கோ விருதினை எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும், பழனிபாபா விருதினை தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் திரு. கே.எம்.சரீப் அவர்களுக்கும்,இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் விருதி இயற்கை விவசாய ஆர்வலர் திரு.சஜாத் அலி அவர்களுக்கும், அன்னை தெரசா விருதினை சமூக ஆர்வலர் திருமதி. பரீஹா சுமன் அவர்களுக்கும், சயீத் சாஹிப் விருதினை கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் திரு. முஸ்தபா அவர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கௌரவித்தார்.
விருதுகளை வழங்கி உரையாற்றிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், கடந்த 2017ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த ஆளுமைகள், துறை சார்ந்த சேவையாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து தலைவர்களின் பெயரில் விருதுகளை வழங்கி எஸ்டிபிஐ கட்சி கெளரவித்து வருகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் விருது, அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக வரக்கூடிய தகுதி. ஒரே மொழியான தமிழ் மொழிக்கு தான் உண்டு என உரத்து முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது, சமூக நீதிக்கு வழிகாட்டிய, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தந்தை பெரியார் பெயரில் விருது, கல்விக்கு கண் தந்தவர் மட்டுமல்ல, தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக தொலைநோக்கு பார்வையோடு அணைகளை கட்டிய காமராஜர் பெயரில் விருது, இயற்கைக்காக போராடிய இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பெயரால் விருது, தமிழுக்கு மிகச்சிறந்த கவிதைகளை தந்த கவிக்கோவின் பெயரால் விருது, இன்றைக்கு இருக்கக்கூடிய பாசிச பயங்கரவாதம் என்னவென்று தெரியாத அந்த காலக்கட்டத்தில் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பழனி பாபா பெயரில் விருது, மனிதநேயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த அன்னை தெரசாவின் பெயரில் விருது, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்து களம் கண்ட எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் பெயரால் விருது என்று, ஒரு கொள்கைவாதிகளை கௌரவிக்கும் விதமாகத்தான் எஸ்டிபிஐ கட்சி விருதுகளை வழங்கி வருகிறது.
அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு, இவர்களது சேவை சமூகத்துக்கு தேவை என்பதை உணர்ந்தே சிறந்த ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சி விருதுகளை வழங்கி கௌரவித்து பாராட்டி வருகின்றது. நாடு இருக்கும் சூழலில் இந்த ஆளுமைகளின் சேவைகள் இந்த நாட்டிற்கு மென்மேலும் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாவும், அவர்கள் மென்மேலும் பணி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதை வலியுறுத்தியும் இந்த விருதினை நாங்கள் வழங்குகின்றோம். அந்த நம்பிக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம். விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார்.
இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
****