பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு ஜனவரி 9, 10- ல் சென்னையில் நடைபெறுகிறது
ஜனவரி, 5, 2024: சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு-2024 மற்றும் 10-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டல் லீராயல் மெரிடியனில் நடைபெற உள்ளதாக முனைவர் விஆர்எஸ் சம்பத் தலைவர், சென்னை வளர்ச்சிக் கழகம் தலைவர், உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் நிறுவனர் அவர்கள் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உலகத் தமிழர் பொருளாதார மையம், சென்னை வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் இந்த மாநாடு, மாநில அரசு, மத்திய அரசு, சில அயல் நாடு அரசுகள், உலகம் முழுவதும் உள்ள வணிகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்புரிவோர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் உதவியோடு நடைபெற உள்ளது.
Press meet Youtube video link 👇
இம்மாநாட்டில் தொழிலதிபர்கள் வணிக நிறுவனத் தலைவர்கள், தொழில் முனைவோர், சுயதொழில் புரிவோர், புதிய கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றவர்கள் இப்படி எல்லோரும் ஒன்று கூடவும் வணிக வளர்ச்சி, முதலீடு வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிக்காகத் தொழில் முனைவோர்களோடு பணிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், உலகளாவிய கூட்டுறவினை ஏற்படுத்துதல் தொடர்பான விவாதங்களும் இந்த மாநாட்டில் நடைபெறுகிறது.
அமைச்சர்கள், கொள்கை வகுப்போர், அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் போன்றவர்களை மாநாட்டுக்கு வரவழைத்து அமைதி வழியில் மதநல்லிணக்கத்தோடு வாழும் முறையில் வளர்ச்சிக் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இம்மாநாடு முற்றிலும் புதுமையான சிறப்பு நிலை வாய்ந்த சூழலில் இரண்டு நாள் நிகழ்ச்சியாக அமைந்திருக்கும். மேலும் சிறப்பு வாய்ந்த பேச்சாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தாங்கள் எதிர்கொண்ட வாய்ப்புகள் சவால்கள் பற்றிய அனுபவங்களையும் கூறுகிறார்கள்.
முதல் மாநாடு சென்னையில், இரண்டாவது துபாய் நாட்டில், மூன்றாவது சென்னையில், நான்காவது தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில், ஐந்தாவது புதுச்சேரி மாநிலத்தில், ஆறாவது மாநாடு சென்னை மாநகரிலும், ஏழாவது மாநாடு இணையவழியிலும், எட்டாவது மாநாடு சென்னையிலும், 9-வது மாநாடு துபாய் நாட்டிலும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பத்தாவது மாநாடாக இந்த மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், இங்குள்ள வணிக வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்க தனித்தனி அமர்வு மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின்போது இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளின் இறுதியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த மாநாடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொருளாரத் துறையிலும், கலைப் பண்பாட்டுத் துறையிலும், சமூக நலத்துறையிலும் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையிலும் சிறப்புற விளங்க ஊக்குவிப்பாக அமையும்.
மேனாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழர்-தமிழ்நாடு சமூக பொருளாதார வளர்ச்சியில் கலைஞரின் பங்கு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் இந்த மாநாட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு திரு. துரைமுருகன், மாண்புமிகு திரு.த.மோ.அன்பரசன், மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன், மாண்புமிகு டாக்டர்.பி.டி. பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு திரு. செஞ்சி மஸ்தான், மாண்புமிகு திரு.டி.ஆர்.பி.ராஜா, புதுச்சேரி மாநில அமைச்சர்கள் மாண்புமிகு திரு. ஏ. நமச்சிவாயம், மாண்புமிகு திரு.க.லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு இசைவு தெரிவித்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் டாக்டர் ஜி. விஸ்வநாதன், திரு.பழனி ஜி. பெரியசாமி, பிரசிடென்ட் ஓட்டல் அதிபர் திரு.அபுபக்கர் போன்றவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
மொரிசியஸ் நாட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பரமசிவம் பிள்ளை வையாபுரி, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன் உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் நிறைவு விழாவில் புகழ் பெற்ற தமிழர்களுக்கு "உலகத் தமிழர் மாமணி" என்ற பன்னாட்டு விருதும் வழங்கப்படுகிறது.
இந்தப் பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக திரு.வி.ஜி.சந்தோஷ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாடு பற்றிய முழு தகவல்களையும் https://economic-conference.com இணையதள முகவாயில் அறிந்து கொள்ளலாம்.
****