ஓராசிரியர் பள்ளிகளுக்கு நிதி திரட்ட பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்று கூடுகின்றனர்

  • ஆன்லைனில் பாடல் கச்சேரிக்கு ஏற்பாடு 

சென்னை: பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் 7 கலைஞர்கள் ஒன்றிணைந்து , ஒற்றை ஆசிரியர் பள்ளிகளுக்கான நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 22 முதல் ஆன்லைனில் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு  கல்வி கற்பித்தலை எளிதாக்க, 'ஓராசிரியர் பள்ளி' எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  சுவாமி விவேகானந்தா  ஊரக வளர்ச்சி சங்கத்தின் மூலம்,  2006 இல் இருந்து இவ்வாறு கற்பிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 1,057க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 31,000 குழந்தைகளுக்கு கற்பிக்கப் படுகிறது.

மகளிர் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, கிராமங்களில் உள்ள தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களே ஆசிரியர்களாக இருந்து மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். பள்ளிகளில் கரும்பலகைகள், பாய்கள், சோலார் விளக்குகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் பொருத்தப்படுவதோடு,  குழந்தைகளுக்கு புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் மருத்துவ முகாம்கள் இலவசமாக நடத்தப்படுகின்றன.  

கற்றல் திறன்களை கூர்மைப் படுத்துதல், நடத்தை முறைகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது.

அடுத்த ஒரு வருடத்தில், தமிழ்நாட்டு கிராமங்களில் கூடுதலாக 1,000 ஓராசிரியர் பள்ளிகளை அமைப்பதற்காக, தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டு நிதி தளமான மிலாப் மூலம் நிதி திரட்டுகின்றன. இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்று, ரூ 1 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன.

இதற்காக, புகழ்பெற்ற கலைஞர்கள் திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ, திருமதி ஜெயந்தி குமரேஷ், திரு. அபிஷேக் ரகுராம், லால்குடி திரு.ஜி.ஜே.ஆர் கிருஷ்ணன், லால்குடி திருமதி. விஜயலட்சுமி, திருமதி.அம்ரிதா முரளி மற்றும் திரு. அஷ்வத் நாராயணன் ஆகியோர் இதை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும்,  நிதிதிரட்டலுக்கு ஆதரவைப் பெறுவதற்கும் ஆன்லைன் மூலம்  பாடல் நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.

****

Recent Posts