கண்ணகி கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை, நவம்பர் 22, 2025: தமிழர்களின் அடையாளமாக வீற்றிருப்பதும், இலங்கையில் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்த வரலாற்று நிகழ்வுகளை கூறும் மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகள் மங்களதேவி கண்ணகி கோவிலை அரசுடைமை ஆக்கி இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்ததாவது: தமிழக–கேரள எல்லையில், சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் சேரன் செங்குட்டுவன் கட்டிய 2,000 ஆண்டுகள் பழமையான மங்களதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமியில் நடைபெறும் விழாவுக்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவிலுக்கு தமிழகத்தின் கூடலூர்–பளியங்குடி வழியாக ஒரு பழைய வனப் பாதை இருந்தாலும், அது நடைபாதை மட்டமாகவே பராமரிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கேரள மாநிலத்தின் கொக்கரகண்டம் வழியே செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி, ஆண்டுதோறும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
Press meet Youtube Video link 👇
தமிழக வரலாறு, பண்பாடு, மொழி எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் இந்த கோவிலை, கேரள அரசு தன்னுடையதாகக் கூறி, தரிசனத்திற்கே அனுமதி பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களின் உரிமைகள் இங்கு புறக்கணிக்கப்படுகின்றன.
மத்திய தொல்லியல் துறை தலைவர் கிருஷ்ணன் மற்றும் தமிழக தொல்பொருள் துறை இயக்குநர் நாகசாமி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகள் 1965–66 கல்வெட்டு தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளன. பின்னர் 1975-ல் தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளுடன் சேர்ந்து கோவில் நிலத்தை அளந்து, அது தமிழக எல்லைக்குள் இருப்பது ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. கூடலூர்–பளியங்குடி வழியாக சாலை அமைக்க 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் கேரள அரசு தன்னுடைய வனப்பகுதி வழியாக சாலை அமைத்து, அதுவே இன்றுவரை மக்கள் பயன்படுத்தும் வழியே ஆகிவிட்டது.
1982-ல் பளியங்குடி வழியாக சென்ற தமிழர்களுக்கு மீதான பொய்வழக்கும், 1983-ல் கோவிலில் துர்க்கை சிலை வைத்து குழப்பம் ஏற்படுத்தியதும், கேரள வனத்துறையின் கட்டுப்பாடுகள் காரணமாக ஏழு நாள் விழா ஒரு நாளாக குறைந்ததும்கூட அவர் குறிப்பிட்டார்.
கண்ணகி கோவில் தமிழர்களின் அடையாளச் சின்னமாக திகழ்கிறது; இலங்கை தமிழ் மன்னர்களும் இதை தரிசித்துள்ளனர். எனவே கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யவும், ஒவ்வொரு தமிழ் பௌர்ணமியிலும் மூன்று நாள் தரிசனம் அனுமதிக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கூடலூர்–பளியங்குடி வழியாக சாலை அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்ததன் பேரில் முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கியிருப்பதையும் அவர் கூறினார். தமிழக எல்லை குமுளி பகுதியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு “கண்ணகி” என்ற பெயர் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இவ்வாறு மங்களதேவி கண்ணகி கோவிலை அரசுடைமையாக மாற்றி, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்து புனரமைப்பு, கும்பாபிஷேகம் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழர்களின் உரிமைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் என அவர் முடிவுறுத்தினார்.
****
