பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் மற்றும் மகாலஷ்மி வித்யா மந்திர் இணைந்து நடத்திய புத்தக முன் வெளியீட்டு விழா
குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை எண்ணிலடங்கா எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுத்துலகில் பல சாதனைகள் புரிந்து, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனம்; தனது சிறப்பு கௌரவ பிரதிநிதி ஐமாலியன் விருது பெற்றவர், அன்னதான செம்மல், இந்த புத்தகங்கள் உருவாக உறுதுணையாக இருந்தவர், பல குழந்தைகளின் கல்விக்கு உதவி புரிபவர், திரு. ரோட்டரியன் AKS Dr. K. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 3 ம் தேதி மகாலட்சமி வித்யா மந்திர் பள்ளியுடன் இணைந்து, ஜமால் முகமது கல்லூரியின், பேராசிரியர், அப்துல் முகமது அலி ஜின்னா அவர்கள் எழுதிய ‘அப்துல் சந்தித்த அழிந்து கொண்டிருக்கும் அரியவகை விலங்குகள்’ தொடரின் முதல் மூன்று புத்தகங்களின் முன் புத்தக வெளியீட்டை நடத்தியது.
எழுதுவது அதை நூலாக வெளியிடுவது என்கிற புதிய எழுத்தாளர்களின் கனவை நனவாக்க பேக்கிடெர்ம்டேல்ஸ் உறுதுணையாக இருக்கிறது. இது வரை 10 லட்சம் குழந்தைகள் இலக்கியத்தை, கலையை, படைப்பாற்றலை வெளிப்படுத்த தனது பயிற்சிபட்டறை மூலம் துணைபுரிந்துள்ளது. அர்ஜென்டினா, நைஜீரியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிள் உள்ள குழந்தைகள் பலர் எழுதி உள்ளனர். 6 வயது முதல் 10 வயது வரையிலான 2000 குழந்தைகளுக்கான பயிலரங்க நடத்த திட்டமிட்டுள்ளது. சிறுவர் தினத்தில்,100 மேற்பட்ட குழந்தைகள் புத்தகங்கள் வெளியிட்டு, பச்சைமலை, கொல்லிமலை, சத்தியமங்கலம் வாழ் மலைக்குடி குழந்தைகளுக்கு இலவசமாக அளிக்கும் திட்டம் உள்ளது.
காடுகள் அழிக்கப்படுவதால் பல விலங்கினங்கள் அழிந்துக் கொண்டு வருவதை ‘அப்துல் சந்திக்கும் அழிவின் விளிம்பில் உள்ள அரிய விலங்கினங்கள்' என்ற தொடரில் எளிதாக குழந்தைகளை சென்று அடையும் வகையில் முப்பது புத்தகங்களின் தொடரில் 3 புத்தகங்களான 'அப்துல் சந்தித்த சொம்பு மூக்கு முதலை', 'அப்துலின் வழியில் ராஜநாகம்,’ ‘அப்துல் கண்ட லங்கூர் குரங்கு' என்ற இந்த மூன்று புத்தகங்கள் உருவான கதைப்பற்றி, அழகாக சித்திரங்கள் வரைந்த வெள்ளாளர் கல்லூரி, ஆங்கில துறையை சார்ந்த மாணவி சம்யுக்தா பற்றியும் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனர் முனைவர். ர. லஷ்மி ப்ரியா குழந்தைகளுடன் அவரின் பயணம் பற்றி அறிமுக உரையில் கூறினார்.
வனவிலங்குகளின் மேல் தனக்குள்ள ஆர்வத்தை தன்னுடைய மாணவர்களுடன் பகிர்ந்துக் கொண்டு இருந்த ஜமால் முஹமது கல்லூரி பேராசிரியர், முனைவர் அப்துல் முகமது அலி ஜின்னா, தன் எண்ணங்களை 'அப்துல் சந்தித்த அழிவின் முடிவில் உள்ள அரிய விலங்குகளான, சொம்பு மூக்கு முதலை, ராஐநாகம், லங்குர் குரங்கு, கானமயில், நீலகிரி மான்கள் போன்ற விலங்குகளைப் பற்றி 5 முதல் 10 வயது குழந்தைகளுக்காக எழுதியுள்ளதை பற்றியும் அனந்த் தொடரில் பத்து வகை விலங்குகளைப் பற்றி எழுதிய அனுபவம் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். காசிரங்கா முதல் பிபிசி ஆவணப்படம் வரை எப்படி வனவிலங்குகள் தன்னை ஈர்த்து இந்த புத்தகங்கள் எழுத ஒரு ஆர்வத்தை தந்தன என்பதை பற்றியும் தனது சிறப்புரையில் பகிர்ந்து கொண்டார்.
மகாலஷ்மி வித்யாமந்திர் பள்ளி குழந்தைகள் புத்தகத்தை வாசித்தனர். மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் இந்த நூலின் ஆசிரியர் அப்துல் அவர்களுடன் கலந்துரையாடியது சிறப்பாக அமைந்தது. மகாலஷ்மி வித்யாமந்திர் பள்ளி தலைமை ஆசிரியை, ரமா ப்ரபா அவர்கள் தனது உரையில் பள்ளிக்குழந்தைகளுக்கு வாசிப்பும், இது போன்ற நல்ல புத்தகங்களும் அவசியம் என கூறினார்.
****