தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் குடியிருப்பு நிலங்களை உரிமையாக்கிட சட்டமியற்ற பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம்

சென்னை, 12.04.2025:  தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் குடியிருப்பு நிலங்களை உரிமையாக்கிட சட்டமிற்ற பத்து இலட்சம் கையெழுத்து இயக்கமும், மக்கள் தொகை அடிப்படையற்ற நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு விழிப்புணர்வு இயக்கமும் நடைபெறும் என்று தமிழக முன்னேற்ற முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல் இ‌ன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். அவருடன் செயலாளர் வழக்கறிஞர் சோபன் பாபு, செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், மகளிர் அணித் தலைவர் திருமதி காஞ்சனா, ஜனநாயக மகளிர் கட்சித் தலைவர் திருமதி.அம்மு ஆறுமுகம், நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் நஞ்சுண்டேஸ்வரன். கள்ளிக்குப்பம் மக்கள் நலக் குழு பொறுப்பாளர்கள் ஜெயுமுருகன், ஆறுமுகம்,ரமேஸ் கலந்து கொண்டனர்.

மேலும் அவர் கூறுகையில்:

1. நகரமயமாக்கல், நீர்நிலை தன்மை மாறிய நிலையில் அல்லது நோக்கமற்று வறண்டு போனபோதெல்லாம் நிலமற்ற ஏழை மக்கள் அதை ஆக்கிரமித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் சில சமயங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மக்கள் ஆக்கிரமித்திருப்பதும் உங்களுக்குத் தெரியும். மேய்க்கால் மற்றும் பிற புறம்போக்குகளின் நோக்கம் அதன் தேவையையும் நோக்கத்தையும் இழந்துவிட்டதால் குடியிருப்பததற்கு இடம் வாங்க வசதி அற்ற மக்கள் அத்தகைய இடங்களில் குடியிருக்கப் பயன்படுத்தினர். உண்மையில், இதுபோன்ற ஏராளமான குடியிருப்பாளர்களுக்கு ஒப்படைவு மற்றும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

Press meet Youtube Video link 👇 

மேலும், நீர்நிலைகளிலோ அல்லது மேய்ச்சல் புறம்போக்கிலோ தேவையான மக்களுக்கு ஒதுக்கீடு செய்திட அரசின் நிலை ஆணைகள் முற்றிலும் தடை செய்யவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், சமீபத்திய தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் சட்டம், 2007 நோக்கமும் அத்தகைய ஒப்படைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கவில்லை. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள். வாரியத்தின் நிலை ஆணைகள் மற்றும் மேலே கூறப்பட்ட சட்டம் ஆகிய இரண்டும் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு அத்தகைய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒப்படைவு செய்வதில் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு விட்டுவிடுகின்றன. செந்தில்குமார் எதிராக மாவட்ட ஆட்சியர், வேலூர் என்ற வழக்கில் மேற்கூறிய சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஏற்புடைதா என்ற பார்வையின் போது, நீர்நிலைகளில் பட்டா வழங்குவதற்கான அரசு ஆணைகளை தமிழக அரசு மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. குறிப்பாக அரசு பட்டா அல்லது ஒப்படைவு வழங்குவதை செயல்படுத்தும் முந்தைய அரசு ஆணைகளை ரத்து செய்யக்கூடாது. அப்போதும், ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற அரசாணைகளில் திருத்தம் செய்யவில்லை.

நீர்நிலைகள் மற்றும் புறம்போக்குகள் மீதான ஆக்கிரமிப்புச் செய்திகளை நல்ல நோக்கத்தினாலோ அல்லது சில தனி நபர்களின் தூண்டுதலின் பேரிலோ ஊடகங்கள் வெளியிடும் போதெல்லாம், வருவாய்த்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை நீர்வள அமைப்பு அதிகாரிகளும் பழைய ஏ-ரிஜிஸ்டரை வைத்துக்கொண்டு ஏழைகளை மட்டும் வெளியேற்ற முயல்கிறார்கள். வணிக மற்றும் பணக்காரர்களின் பகுதிகளை விட்டு விடுகிறார்கள். சில இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அனைத்து மக்களுக்கும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். இரண்டு குறிப்புக்களை முன் வைக்க விரும்புகிறோம். முதலாவதாக, ஒப்படைவு மற்றும் பட்டாவுக்குப் பிறகு மக்களை ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும், இரண்டாவதாக, நீர்நிலையை மீட்டெடுக்க முடியாதபோது அல்லது புறம்போக்கு நிலங்கள் அதன் தன்மையை இழந்துள்ள நிலையில், உதாரணமாக நகர்ப்புறங்களில் மேய்க்கால் புறம்போக்கு, ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் இதுபோன்ற வெளியேற்ற நடவடிக்கை என்பது தார்மீக அல்லது அறிவுபூர்வமான அடிப்படையில் எப்படி செல்லுபடியாகுமென தெரியவில்லை.

முதல் வகையில் நீர்நிலைகள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கில் கூட ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்படைவு அல்லது பட்டா அடிப்படையில், அத்தகைய நபர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 300-A இன் கீழ் அரசியலமைப்பு உரிமை உள்ளது மற்றும் இரண்டாவது வகையில், தேவையற்ற நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுவது நோக்கமற்ற செயலாகும்.

எனவே, தேவையற்ற நீர்நிலைகள் மற்றும் தன்மை மாறிய மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஏழை மக்கள் இடம்பெயர்வு இன்றி அங்கேயே தொடர்ந்து வாழ தமிழக அரசு உடனடியாக சட்டமியற்றினால் அது அத்தகைய மக்களை நிரந்தரமாக பாதுகாக்கும் என்பது உறுதி. அடுத்த நிலையில் இது வரை இப்படி பாதிக்கப்பட்டு வெளியேற்றிய மக்களுக்கு உரிய மாற்று இடமும் அளிக்கப்படவில்லை. ஆட்சேபகமற்ற அரசு புறம்போக்கு நிலங்களை மக்களுக்கு அளித்திட தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டு பட்டாகளுக்கும் வழங்கி வருகிறது. இருப்பினும், உண்மையில் தேவையற்ற நீர்நிலைகள் மற்றும் தன்மை மாறிய மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.எனவே, இத்தகைய மக்களை நிரந்தரமாக பாதுகாத்திட தமிழக அரசு சட்ட பாதுகாப்பு அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

அதற்காக, எல்லா வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு அந்த குடியிருப்பு நிலங்களை உரிமையாக்கிட சட்டமிற்ற தமிழக அரசை வலியுறுத்தி பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக நடைபெறும்.

2. இந்திய அரசியல் சாசன பிரிவு 82 திருத்தப்பட்டு, மக்களவை இடங்கள் எல்லா மாநிலங்களுக்கும் சம அளவில் பிரிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது மக்கள் தொகை அடிப்படையில் கூடாது.

இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டாட்சி என்ற அடிப்படையில் இந்திய மைய அரசில் எல்லா தேசிய இனங்களுக்கும் சமமான வாய்ப்பும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியா -2-

என்ற ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கு ஏற்புடைய ஒன்றாக இருக்கும். அத்தகைய அதிகாரமும் வாய்ப்பும் நிலையானதாக இருந்திட வேண்டும். ஒரு தேசிய இனத்தின் உரிமை என்பது நிச்சயமற்ற தன்மைகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது. அந்த வகையில் மக்கள் தொகை அடிப்படை என்பது நிச்சயமற்ற தன்மை கொண்டது.மக்கள் தொகை என்பது பல காரணங்களால் கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

இப்பொழுது இருக்கக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு சட்டம் என்பது தேசிய இன மக்களின் அல்லது மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்கக்கூடியது. அதன் காரணமாக, அதிக மக்கள் தொகை பெருக்கம் கொண்ட மாநிலங்கள் மக்களவையில் அதிக இடங்களை பெற்று, குடும்ப கட்டுபாடு திட்டங்களை தீவிரமாக கடை பிடித்திடும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து அதற்கேற்ப குறைவான மக்களைவை இடங்களை பெறுவது மைய அரசில் அதிகார குவியலை சில மாநிலங்களுக்கு ஏற்படுத்தும்.. இப்பொழுது உள்ள மக்கள் தொகை பிரிவு என்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை மைய அரசில் அதிகாரமற்ற ஒன்றாக வைத்து உள்ளது. இது, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் என்றால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை மைய அரசில் அதிகாரமற்ற நிலைக்கு தள்ளிவிடும்.

எனவே, எல்லா மாநிலம் அல்லது எல்லா தேசிய இனங்கள் அடிப்படையில் மக்களவை இடங்கள் சமமாக பிரிக்கப்பட வேண்டும். அதற்கு, இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 82ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென்பதை திருத்தி எல்லா மாநிலங்களுக்கும் சமமான அடிப்படையில் மக்களவை தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென்பதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி முன் வைக்கிறது. இப்படி, மக்களவை தொகுதிகள் சமமாக பிரிக்கப்பட்டாலே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிகார பரவலை எளிதாக பெற்று, மைய அரசின் ஒர வஞ்சனை நடைமுறைகளிலிருந்தும் குறிப்பாக இந்தி மொழித் திணிப்பு, நிதி பகிர்வு, கல்விக் கொள்கை போன்றவற்றிலிருந்து விடுபட்டு தமிழகம், தென் இந்தியா தவிர பிற இந்தி பேசாத மாநிலங்கள் அதிகாரமிக்கதாக வலுப்பெறும் என்பது உறுதி.

மாநிலங்கள் அவையைப் பொறுத்த அளவில், எல்லா மாநிலங்களும் சமமாக பிரிக்கப்படவேண்டும்.அப்படி, நாடாளுமன்ற இரு அவைகளும் எல்லா மாநிலங்களுக்கும் சமமாக பிரிக்கப்பட்டால் தான் உண்மையான கூட்டாச்சிக்கு வழிவகுக்கும்.

இந்திய அரசியல் சாசன பிரிவு 82 திருத்தப்படும் வரை 1971 மக்கள் தொகை அடிப்படையே தொடர வேண்டும்.

இந்திய அரசியல் சாசன பிரிவு 82 முறையாக திருத்தப்படும் வரை 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே மக்களவை தொகுதிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புக்கே, மறுசீரமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மக்களின் அதிகாரத்தை பறித்திடும் நடவடிக்கைகளில் இந்திய அரசு எந்த முயற்சியையும் செய்திட கூடாதென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி இந்திய மைய அரசை வலியுறுத்துகிறது.

மக்கள் தொகை அடிப்படையற்ற நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு நடைபெற மத்திய அரசை வலியுறுத்தி விழிப்புணர்வு இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்துவதென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த இரு நிகழ்வுகளிலும், ஜனநாயக மகளிர் கட்சி இணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮