UBER, OLA, RAPIDO, PORTER, NAMMAYATRI நிறுவனங்களை முறைப்படுத்த உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, அக்டோபர் 25, 2024: தமிழகத்தில் செயலி வடிவில் இயங்கி வரும் UBER, OLA, RAPIDO, PORTER, NAMMAYATRI போன்ற நிறுவனங்களை முறைப்படுத்த போக்குவரத்து துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகப் போக்குவரத்து (RTO) துறையில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹூர் ஹூசைன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் மாநில தலைவர் சுரேந்திர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

UBER, OLA, RAPIDO, PORTER, NAMMAYATRI நிறுவனங்களை முறைப்படுத்தஉரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் வலியுறுத்தல்
அப்போது அவர்கள் பேசியதாவது:
கடந்த 2023 ஏப்ரல் போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை உரிமை குரல் ஓட்டுநர் சங்கம் அறிவித்தது. அந்த செய்தியை அறிந்த போக்குவரத்து துறை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் அன்றைய போக்குவரத்து துறை ஆணையர் உயர்திரு நிர்மல் ராஜ் IAS அவர்களுடன் எங்களை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வெகுவிரைவில் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதனை தொடர்ந்து அந்த முற்றுகை போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றோம். ஆனால் அதன் பின்பு எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை அமைச்சருக்கு நினைவூட்டல் செய்யப்பட்ட பின்பும் அது குறித்து அமைச்சர் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீப காலமாக இந்த பிரச்சனைகள் குறித்து மீண்டும் அமைச்சரை தொடர்பு கொண்ட போது அமைச்சர் தரப்பிலிருந்து எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை அமைச்சரை சந்திக்கவும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் வாயிலாக எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொது மக்களின் கவனத்திற்கும் கொண்டு செல்ல விரும்புகின்றோம்.

கோரிக்கை -1

ஊபர், ஓலா நிறுவனங்கள் 2000 ரூபாய் சவாரி ஓட்டும் ஓட்டுனரிடம் நாள் ஒன்றுக்கு சுமார் 400 ரூபாய் வரை கமிஷனாகவும் ரூபாய் 100 க்கு மேல் (GST) வரி பிடித்தம் வேறு செய்கிறார்கள் இதனால் ஓட்டுநர் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதே வேலையில் 2000 ரூபாய் சவாரி ஓட்டும் ஓட்டுநர்களிடமிருந்துநம்ம யாத்திரி நிறுவனம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 45 என்றும் ராபிட்டோ 110 ரூபாய் என்ற முறையிலும் சந்தா முறையில் குறைந்த கமிஷனை பெற்றுக் கொள்கிறார்கள். ஆகவே வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் பணம் முழுவதும் ஓட்டுனர் தொழிலாளர்களின் கைகளில் நேரடியாக சென்றடைகிறது இந்த சந்தா முறையில் (GST) வரி பிடித்தமும் செய்யப்பட மாட்டாது இதனால் ஓட்டுணர்களின் வாழ்வாதாரம் ஓரளவிற்கு பாதுகாக்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆட்டோ களுக்கே கிலோமீட்டருக்கு 12 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயம் செய்துள்ள போதிலும் ஊபர் நிறுவனம் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு இன்றளவும் கிலோமீட்டருக்கு 11 ரூபாய் என்ற அளவில் சவாரிகளை வழங்கி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குகிறது.

அதேபோன்று ஆப் மூலமாக சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் போர்ட்டர் நிறுவனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓட்டுனர்களை அதிக பாரம் (OVERLOAD) ஏற்ற செல்லி கட்டாயப்படுத்துவது அதற்கு மறுக்கும் ஓட்டுநர்கள் மீது அபராதம் விதிப்பது ஓட்டுநர்களிடம் அதீத கமிஷன் எடுப்பது போன்ற குற்றச் செயல்களில் போர்ட்டர் நிறுவனம் ஈடுபடுகிறது.

இதேபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ஊபர், ஓலா, போர்டர் நிறுவனங்கள் மீது தொடர்கிறது எனவே ஆப் வாயிலாக பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை ஆணையர் தலைமையில் கடந்த நவம்பர் 2023 நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியை உடனடியாக மீண்டும் நடத்தி அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான சந்தா முறையிலான (கமிஷன்) வசூலிக்க வேண்டும் (CBIC) மத்திய மறைமுக வரிகள் ஆணையத்திடம் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கொடுத்துள்ள வேண்டுகோளின் படி ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் பணத்திற்கு வரி (GST) வசூலிக்கப்படக்கூடாது என்று என்று உத்தரவிட வேண்டும்.

கோரிக்கை -2

கடந்த 10 ஆண்டுகளாக அரசு பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம் ஆகியவற்றை பலமுறை உயர்த்தியுள்ள தமிழக அரசு 11 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்காததால் உயர் நீதிமன்றமே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ள போதிலும்

ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படாததால் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்கள் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சென்னை மாநகரில் மகளிர்க்கு ஒரு லட்ச ரூபாய் மானியத்தில் பிங்க் நிற ஆட்டோக்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது மானியத்தில் வாங்கப்படும் ஆட்டோக்களை பெண்கள் 2013 ஆண்டு நிர்ணயம் செய் செய்யப்பட்ட கிலோமீட்டர் 12 ரூபாய் என்ற கட்டணத்தில் இயக்கினால் அவர்களால் அந்த ஆட்டோக்களுக்கு தவணைகளை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே உண்மை நிலைமை.

ஆகவே தமிழக அரசு ஆட்டோ களுக்கான மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்த பின்பு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கை -3
தமிழக முழுவதும் ஆட்டோக்களுக்கு எப்சி கட்டணமாக ரூபாய் 650 அரசு நிர்ணயித்துள்ளது.

ஆனால் அந்த ஆட்டோக்களுக்கு 2.5 மீட்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ரூபாய் 650 வரை வசூல் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட RTO களுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் மட்டுமே வாகனங்களுக்கு F.C வழங்கப்படுகிறது இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சொகுசு ரக கார்கள் வாடகைக்கு இயக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 200 மேற்பட்ட சொகுசு வகை கார்கள் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்படுகிறது இதனால் தமிழக அரசுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சூப்பரண்டுகள், உதவியாளர்கள் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல ஆர்டிஓ அதிகாரிகள் இரண்டு, மூன்று அலுவலகங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாகவும் உள்ளனர் சில மோட்டார் வாகன ஆய்வாளர்களும் இரண்டு, மூன்று அலுவலகங்களில் பணி செய்கின்றனர். இதனால் பல அதிகாரிகள் அதீத பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வேலைகளை செய்து முடித்து கொடுக்கிறார்கள்.

நான் மேலே சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள போதிலும், தமிழக போக்குவரத்து துறையில் ஓட்டுநர் தொழிலாளர்களின் பிரச்சனைகள், லஞ்சம், ஊழல் மற்றும் பணியாட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ள போதிலும் இது குறித்து அமைச்சர் எந்தக் கவலையும் இல்லாமல் செயல்படுவது வேதனைக்குரியவது.

போக்குவரத்து துறை அமைச்சர் தன் துறை சார்ந்த பிரச்சனைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

இன்னும் தேர்தலுக்கு 18 மாதங்களே உள்ள நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ, கால் டாக்ஸி, மேக்ஸிகேப், டூரிஸ்ட் கேப், சரக்கு வாகன ஓட்டுநர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தி.மு.க அரசு உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

விடியல் ஆட்சியில் இதுவரை விடியாத ஓட்டுநர் தொழிலாளர்களின் வாழ்வில் விரைவில் விடியல் பிறக்கும் என்று நம்புகிறோம்.

உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் உள்துறைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் ஆகியோரோடு தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இல்லையென்றால் தி.மு.க அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் ஓட்டுநர் தொழிலாளர்களை ஒன்று திரட்டி வலுவான போராட்டங்களை உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் முன் எடுக்கும் என்று கூறினார்கள்.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩