அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஐந்து அம்ச கோரிக்கை கவன ஈர்ப்பு போராட்டம்
சென்னை, ஆகஸ்ட் 27, 2024: இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 16 (4) (A) வை பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஐந்து அம்ச கோரிக்கை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் முதன்மைச் செயலாளர் ச.பாவாணன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அவருடன் மாநில நிதி செயலாளர் கோ.புதியவன், தலைமை நிலைய செயலாளர் எ.தமிழ்குமரன், மாவட்ட செயலாளர் மு.கன்னியப்பன், மாவட்ட நிதி செயலாளர் விநாயகா டாக்டர் ஆனந்தன், மாநில துணை செயலாளர் வேத.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு எண் 16(4) A யினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றி தமிழ்நாடு அரசில் பணியாற்றி வரும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்து, தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கருத்தியல் வாரிசு தான் 'திராவிட மாடல்' அரசு என்பதை தமிழகத்தில் உறுதிப்படுத்த வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டிய பின்னடைவு காலி பணியிடங்கள் சுமார் 11,000 பணியிடங்கள் உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற உடனேயே, அதனை கண்டறிந்து நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தும், பல துறைகளில் காலத்தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் வலியுறுத்தி வருவதும் எங்களால் உணரமுடிகிறது. இருப்பினும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய தேவையும், அரசு ஊழியா அயக்கியப் பேரவைக்கு உள்ளது என்பதை உணர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டி விரும்பிக் கேட்டுகொள்கிறோம்.
தமிழ்நாடு அரசில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கும் இந்த நல்ல வேளையில், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதன் மீது சிறப்பு கவனத்தை ஈர்த்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறையை மேம்படுத்துகிறோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற இடங்களில், தூய்மை பணியிடங்கள் அனைத்தும் முற்றிலுமாக கலைக்கப்பட்டு, தூய்மை பணியாளர்கள் அனைத்தும் வெளி முகமை மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள, அரசு ஆணை எண் 152 வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விளிப்பு நிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. விளிம்பு நிலை மக்கள் அரசு பணிக்கு வரும் வாய்ப்பு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஆணை எண் 152 ஐ திரும்பப் பெற்று தூய்மை பணியாளர்களை வெளி முகமையின் மூலம் பணிக்கு அமர்த்துவதை ரத்து செய்து, தூய்மை பணியாளர்களை தமிழக அரசு நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதனை நிறைவேற்றித் தர வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை, தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை காப்பாளராக கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பு. தமிழ்நாடு முதலமைச்சராக மாண்புமிகு தளபதியார் வரவேண்டும் என்பதை மனதில் கொண்டு, தந்தைபெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் கருத்தியல் வாரிசுதான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும், 'திராவிட மாடல்' ஆட்சியைதர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தேர்தல் பணியாற்றினோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் கருத்தியல் ஆட்சி நடைபெறும் இந்த நேரத்தில் தான், அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை அரசால் அங்கீகரிக்க முடியுமென தங்களிடம் நம்பிக்கை வைக்கிறோம். எனவே அரசு ஊழியர் அய்க்கியப் பேரவைக்கு தமிழ்நாடு அரசால் அங்கீகாரம் வழங்கி, அரசு ஊழியர் அய்க்கியப் பேரவைக்கு சென்னையில் மாநில தலைமை அலுவலகம் ஒன்றையும் வழங்க வேண்டுமாறு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்ட வடிவங்களை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் 38 மாவட்டங்களையும் எட்டு மண்டலங்களாக பிரிப்பது என தீர்மானிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு ஐந்து கட்டப் போராட்டம் வரையறுக்கப்படுகிறது.
முதல் கட்டப்போராட்டம் -28.08.2024 அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களில் துண்டறிக்கைகள் வழங்குதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுதல், அரசு அலுவலகங்களில் பதாகைகளை வைத்தல், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தல், மற்றும் அரசு ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்து கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
இரண்டாம் கட்டப் போராட்டம் -30.08.2024 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்து E-மெயில் மூலம் ஆயிரக்கணக்கான மனுக்கள் அனுப்புதல், X-தளத்தின் மூலம் அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு ஐந்து கோரிக்கைகள் மீது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்தை ஈர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டப் போராட்டம் -07.09.2024 ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டு மண்டல தலைநகரங்களிலும் (சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி) கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தினை நடத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
நான்காம் கட்டப் போராட்டம் 13.09.2024 மாநில அளவில் சென்னை தலைநகரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொள்வது எனவும், அதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வென்றெடுக்க, வலுசேர்க்க அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்டப் போராட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களின் நேரடி கவனத்தை ஈர்த்திடும் வகையில் மத்திய மாநில அனைத்துத்துறை பட்டியல் மற்றும் பழங்குடி ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக்கள் பங்கேற்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி மனு அளித்தல்.
****