"மலையகம் 200" - மாநாடும் ஓவியக்கண்காட்சியும் - 09.12.2023 - காலை 9.00 முதல் பி.ப.4.00 வரை - இலயோலா கல்லூரி, சென்னை
"மலையகம் 200" - மாநாடும் ஓவியக்கண்காட்சியும் - 09.12.2023 - காலை 9.00 முதல் பி.ப.4.00 வரை - இலயோலா கல்லூரியில் நடக்க இருப்பதாக Solidarity for Malayagam செயலாளர் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பி ஏ காதர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
Press meet youtube video👇
மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் இருந்து காலத்துக்குக் கால் ஏனைய நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் குடியேறிய நாடுகளின் பொருளாதார, சமூக, அரசியல் கலாச்சார மேம்பாட்டுக்கு மாத்திரமல்ல அவற்றின் தேசிய உருவாக்கத்துக்கும் பெரும் பங்களிப்பாற்றியுள்ளார்கள். இவர்களில் வெற்றி பெற்றவர்களைப்பற்றி மாத்திரமே உலகம் பேசுகிறது.
இதற்கு முற்றிலும் வேறுபட்டவகையில் ஒரு மக்கள் கூட்டம் நவீன அடிமைகளாக பல நாடுகளுக்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் மலிவான கூலிகளாக ஏமாற்றி கொண்டு செல்லப்பட்ட இவர்களின் கடுமையான உழைப்பு வகித்த உன்னதமான பாத்திரத்தைப் பற்றியும், அவர்கள் அனுபவித்த துயரங்களைப் பற்றியும் உலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அதைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. அவர்களுக்குரிய கௌரவம் வரலாற்று ஆசிரியர்களால் வழங்கப்படவில்லை.
அவ்வாறு மறக்கப்பட்டவர்கிளல் இலங்கையில் வாழும் மலையக தமிழர்கள் பிரதானமானவர்கள். 1833 பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபின்னர் மலிவான உழைப்பாளரின்றி நெருக்கடிக்குள்ளான பெருந்தோட்டத்துறையைக் காப்பாற்றுவதற்கு நவீன அடிமைத்தனம் மாற்றீடு செய்யப்பட்டது. அவ்வாறு 1834 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கல்கத்தாவிலிருந்து "ஒப்பந்தக் கூலிகளை ஏற்றிக்கொண்டு மொரிசியஸ் தீவுக்கு முதலாவது கப்பல் புறப்படுவத்றகு 11 வருடங்களுக்கு முன்பே, சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் (1823ல்), இலங்கையிலே முன்னர் மனித நாட்டமே இல்லாத மழையும் குளிரும் நிறைந்த அடர்ந்த மலைநாட்டுக்கு பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்காக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இவர்கள்.அவர்களைப்போல 150 வருட நீண்ட காலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வருவாயைத் தமது உதிரத்தாலும் வியர்வையாலும் ஈட்டிக்கொடுத்து அத்தேசியத்தின் உருவாக்கத்துக்கு பங்களித்த ஒரு உழைக்கும் சமூகத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. இவர்களின் மூதாதையர் தென் இந்தியாவில் இருந்து இலங்கையில் 1823ல் பிரித்தானியரால் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது கோப்பிப் பெருந்தோட்டத்தில் கால்பதித்து இவ்வாண்டு சரியாக 200 வருடங்கள் ஆகின்றன . ஆயினும் இன்றும் கூட அங்கு இவர்கள் மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு, நவீன அடிமைத்தனத்தில் இருந்து முழுமையாக விடுபடாமல் பல அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவல நிலையிலே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒரு பெருந்திரளானோர் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு புதுவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களில் இன்னொருசாரார் 1983 கரும் ஜூலையின்போதும் அதன் பின்னரும் புலம் பெயர்ந்து இங்கு வந்து இன்னும் நாடற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு காலனித்துவ இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட எம் உழைப்பாளர் அனைவரையும் ஒருதடவை நினைத்துப் பார்த்து அவர்களுக்கு நன்றி கூறுவதற்காகவும் இலங்கை மலையகத்தில் வாழும் எம் இரத்த உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்பதற்காகவும், அங்கு தொடரும் நவீன அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தமிழக அரசு செய்யக்கூடிய வேலைத்திட்டங்களில் அதன் அதன் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தமது தொப்பிள் கொடி உறவுகள் தொடர்பான விழிப்புணர்ச்சியை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவும் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்