இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வணிகப் பிணையச் சந்திப்பு (Business Networking Meet)


  • இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபை அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த வணிகப் பிணையச் சந்திப்பு (Business Networking Meet) 29  அக்டோபர் 2023 அன்று சிறப்பாக நடைபெற்றது.

காலை 9 மணி முதல் 10 மணி வரை மாணவர்களுக்கு புதிய தொழில் முனைதலில் புதுமைகள் புரிதல் என்ற துறையில்  'Mind Your Business'  என்ற தலைப்பில் ஒரு பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.   IIEC அமைப்பின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளரான டாக்டர் ரிச்சர்ட் அவர்கள் பயிற்றுவிக்க, எஸ்.ஆர். எம், வேல்ஸ், எஸ்.ஐ.டி, சாய்ராம், பாரத் யுனிவர்சிட்டி, மற்றும் தஞ்சாவூரில் இருந்து இரண்டு கல்லூரிகள் ஆகிய பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.  

Video link 👇🦻
அதன்பின் காலை 10.30 மணிக்குச் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 11 மணிக்கு  டாக்டர் சாந்தி சரவணன் அவர்களின் வீணைக் கச்சேரி கூடியிருந்தோரை மகிழ்வித்தது.

இதன்பின் இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபையின் ஸ்தாபகர்மற்றும் தலைமையதிகாரியான டாக்டர் ஶ்ரீதேவி அருணாச்சலம் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். அடுத்த நிகழ்ச்சியாக ' மேஜிக் ட்வென்ட்டி தமிழ்' நிறுவனத்தைச் சேர்ந்த திரு. வாசு கார்த்திகேயன் அவர்களது நிறுவனம் தயாரித்துள்ள செயலியின் சிறப்பம்சங்கள் பற்றி உரையாற்றினார். பின்னர் அந்தச் செயலி தொடர்பாக மேஜிக் ட்வெண்ட்டி தமிழ் நிறுவனமும் இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ('MOU' ) கையெழுத்திட்டனர்.
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த திரு அசோக் சண்முகம் 'தொழில் எப்படி நல்ல முறையில் தொடங்குவது' என்பதைப் பற்றி உரையாற்றினார்.

முதன்மை விருந்தினர் திரு.  C.K. குமரவேல் அவர்கள் வியாபாரத்தின் நுணுக்கங்களையும் புதிய தொழில் முனைதல், புதிய உத்திகள் போன்றவை குறித்து ஆணித்தரமாக மனதில் பதியும்படி பல பயனுள்ள தகவல்கள் கொண்ட சிறந்த உரையை நிகழ்த்தினார். மேலும் அவர் மேற்குறிப்பிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தாகும்போது உடனிருந்து, தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் மேஜிக் ட்வென்ட்டி தமிழ் நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளர்களுள் ஒருவர் என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அப்போதுதான் அறிந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்  குறிப்பிட்ட செயலியின்மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை அவர் தன் உரையில் தெரிவித்தார். 
தொடர்ந்து இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபையின் ஸ்தாபகர்மற்றும் தலைமையதிகாரியான டாக்டர் ஶ்ரீதேவி அருணாசலம் அவர்கள்  ஐக்கிய அரபு நாட்டில்  தொழில் தொடங்குவது எப்படி, என்னென்ன தொழில்கள் தொடங்குதல் நன்று, வர்த்தக சபையின் குறிக்கோள்கள், சபையில் இணைந்திருப்பதால் என்னென்ன நன்மை என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபையின் அங்கத்தினரான 'புளூ பெர்க் ஷிப்பிங் லாஜிஸ்டிக்' (Blue Berkhs Shipping Logistics) கம்பெனியைச் சேர்ந்த  திரு பால் தாகூர் அவர்கள் விளக்கக் காட்சியுரை வழங்கினார்.

தொடர்ந்து அனைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.

அதன்பின் பிரபல பாடகி ஜோதி கானமழை பொழிந்தார். தொடர்ந்து நடிகரும் நடன அமைப்பாளருமான 'மாஸ்டர் ஜானி' அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் மாஸ்டர் ஜானி அவர்கள் இறுதிவரை இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

கலையைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஊக்குவிக்கப்படவும், தங்கள் தொழிலில் அவர்கள் மேன்மையுறவும் வேண்டும் என்பதற்காக வர்த்தக சபை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நடுநடுவே கலைஞர்கள் பங்கேற்குமாறு செய்கிறது. மேலும் இங்கேயுள்ள பிரபல கலைஞர்களுக்கு ஐக்கிய அரபு நாட்டில், முக்கியமாக அங்கு வாழும் தமிழ்ச் சமூகத்தில், பெரும் வரவேற்பு உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, கலைஞர்கள் வளரவேண்டும் என்பதே வர்த்தக சபையின் நோக்கம்.

IIEC International Intelligent Educational Consultancy) நிறுவனம் இந்த நிகழ்ச்சியின் தலைப்புக்கான ஸ்பான்ஸராக விளங்கியது. மேலும் பல‌ நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியது.

இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபையின் உறுப்பினர்கள் குழுத் தலைவர் திருமதி  அபர்ணா சபையில் உறுப்பினராக இணைவதற்கான வழிமுறைகளை விளக்கமாகக் கூறினார்.

சபையின் இணைச் செயலர் திரு வேல்முருகன் இந்தோ-ஐக்கிய அரபு நாடு பொருளாதார வர்த்தக சபை குறித்த புள்ளிவிவரங்கள் மட்டுமன்றி ஐக்கிய அரபு நாட்டின் முக்கியப் புள்ளிவிவரங்கள் பற்றியும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஸ்பான்ஸர் IIEC ( International Intelligent Educational Consultancy) அமைப்பின் பிரதிநிதியாக அதன் தலைமை நிர்வாகி  ஶ்ரீதேவி அருணாசலம் தங்கள் நிறுவனம் குறித்த விளக்கக் காட்சியுரையை அளித்தார். 

இந்நிகழ்வில் பலர் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலை 3 மணி முதல் 3 .30 மணி வரை TEPA குழுமத்தைச் சேர்ந்த ஆறு நபர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடல் நடந்தது. எப்பொழுதும்  போல் அவர்கள் பேச,  மற்றவர்கள் கேட்டு கொண்டிருக்கும் முறையாக இல்லாமல் உரையாடல் மூலம் அவையினர் கேள்வி கேட்க, அவர்கள் பதிலளிக்க, மிகச் சிறப்பாக கலந்துரையாடல் நடந்தேறியது. இந்நிகழ்வு உபயோகமாகவும், பல அரிய தகவல்களை அளிப்பதாகவும் இருந்தது, அனைவரையும் கவர்ந்தது.

இறுதியில் IIEC விளக்கக் காட்சியில் மேலை நாடுகளில் குடியுரிமை பெறுதல் பற்றிய ஆலோசனை, தொழில் தொடங்க ஆலோசனை இவற்றை செயலாற்றும்  முறை பற்றியும், பயிற்சி முறை, தொழில் முதலீடு பற்றியும் அந்தந்த துறையைச் சார்ந்தவர்கள் விளக்கினர். நிறுவனத்தைச் சார்ந்த அனைவருக்கும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட்டது.

திரு திணேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். பின்னர் இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதாக நிறைவுற்றது.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴