கிராம ஊராட்சி செயலாளர்களின் இடமாற்றம் மற்றும் தண்டிக்கும் அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்தங்கள் / பணி விதிகளைத் திரும்பப் பெற தன்னாட்சி சார்பில் அரசுக்குக் கோரிக்கை


சென்னை, நவம்பர் 20, 2023: கிராம ஊராட்சி செயலாளர்களின் இடமாற்றம் மற்றும் தண்டிக்கும் அதிகாரம் தொடர்பான சட்டத்  திருத்தங்கள் / பணி விதிகளைத் திரும்பப் பெற தமிழக அரசை வலியுறுத்தி தன்னாட்சி சார்பில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

Press meet video👇👇

அப்பொழுது அவர்கள் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளின் மூலமாகவே அடித்தட்டு மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரப் பணிகளும், சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைப் பராமரிப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு. வீட்டு வசதி, வாழ்வாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார நிலையங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தத்தினை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

கிராம ஊராட்சியில் உள்ள ஒரே ஒரு நிர்வாக ரீதியான பணியாளரும், கிராம ஊராட்சியிலிருந்து ஊதியம் பெறுபவருமான ஊராட்சி செயலாளரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் அவரின் பணியிட மாற்றம் ஆகியவை தொடர்பாக கிராம ஊராட்சியிடமிருந்த அதிகாரத்தைப் பறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்திருக்கிறது அரசு. இது தொடர்பாக, கடந்த ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவுகள் 104 மற்றும் 106 ஆகியவற்றில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்ததோடு கடந்த செப்டம்பர் மாதம் ஊராட்சி செயலாளர்களுக்கான பணி விதிகளையும் (அரசாணை நிலை எண் 113 ஊ.வ.ஊ.து நாள் 13.09.2023) அறிவித்திருக்கிறது. இந்த பணி விதிகள் மூலம் இனி ஊராட்சி செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சிகள்) வழங்கி இருக்கிறது, அரசு.

கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஊராட்சி செயலரின் பங்கு மிக முக்கியமானது. அவர் கிராமசபை, ஊராட்சி மன்றத் தீர்மானம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் பணி செய்வதே சரியானதாக இருக்கும். ஊராட்சிக்குத் தேவையான மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதுவே உகந்த வழிமுறையாக இருக்கும். கிராம ஊராட்சியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் ஒரு அலுவலர் மற்றும் பல கிராம ஊராட்சிகளை மேற்பார்வை செய்யும் ஒரு அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஊராட்சிகளின் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரத்தினை வழங்கி இருப்பது ஊராட்சி நிர்வாகத்தின் சுதந்தரத்தைப் பறிக்கின்ற செயல். ஊராட்சி செயலர்கள் இனி வட்டார வளர்ச்சி அலுவலர் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டால் போதுமானது என்று முடிவெடுத்து விட்டால் ஊராட்சி நிர்வாகம் கேள்விக்குறியாகிவிடும்.

மாநில சுயாட்சியினை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு உள்ளாட்சிகளின் அதிகாரத்தினை பறிக்கும் வகையில் மேற்கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கைகள் மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனவே, சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் பணி விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் தன்னாட்சியின் சார்பாக கோருகிறோம்.

இந்த கோரிக்கைகளை முன் வைத்து ஊராட்சித் தலைவர்கள் முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். மேலும், வரும் நாட்களில் முதற் கட்ட பயணமாக,

  • திருச்சி மாவட்டம்-திருவெறும்பூர் ஒன்றியம்
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம்
  • கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியங்கள்
  • புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம்
  • நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் 

உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குச் சென்று, அப்பகுதி ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், சமூக பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து இச்சட்டத் திருத்தத்தின் பற்றியும் இதனைத் திரும்பப் பெற வேண்டிய ஆர்வலர்கள், விளைவுகள் அவசியம் குறித்தும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்த உள்ளோம். வருகின்ற குடியரசு நாளான ஜனவரி 26 வரை, அடுத்தடுத்த கட்டங்களாக மக்கள் சந்திப்பு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அடித்தட்டு மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டத் திருத்தத்தினைத் திரும்பப் பெற வும் ஊராட்சி செயலாளர்களின் பணி விதிகளை ரத்து செய்யவும் வேண்டுகிறோம்.

*****

Recent Posts