தமிழர் விரோத ஆளுநர் தமிழகத்திலிருந்து வெளியேற வேண்டும்! ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!


சென்னை, ஜனவரி 12, 2023: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இன்று (ஜன.12) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஷீத், கட்சியின் சென்னை மண்டல மாவட்ட தலைவர்கள் முகமது பிலால், முகமது சலீம், ஹூசைன், ஜூனைத் அன்சாரி, புஷ்பராஜ், மாலிக், சீனிமுகமது, ஜாஃபர், ஜூபைர், செய்யது அகமது மற்றும் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Youtube video👇👇

முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், "நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, 'ஒரே நாடு ஒரே அமைப்பு' எதிர்மறை ஏற்பாடுகளை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மிக வேகமாக செய்துகொண்டிருக்கிறது. நாட்டின் என அனைத்து முனைகளையும் வலிந்து மையப்படுத்தும் கூட்டாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகின்றது.

அதன் ஒருபகுதியாக தாங்கள் நியமிக்கும் ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசின் செயல்பாடுகளை தடுத்து வைப்பது, மாநில அரசின் உரிமைகளை தர மறுப்பது என்பன போன்ற கூட்டாட்சிக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் .மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், அவரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. 

மாநில அரசின் நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட 21 மசோதாக்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வரும் தமிழக ஆளுநர், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜன.09 அன்று உரைநிகழ்த்திய மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் மரபை மீறிய, சட்டமன்ற ஜனநாயகத்தை மீறிய செயல் கண்டனத்திற்குரியது.

ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் ஆளுநர் தனது சொந்த விறுப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு. ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, தமிழ்நாடு, திராவிடம் மற்றும் சமூகநீதி வெற்றியின் அடையாள வார்த்தைகள், தலைவர்கள் அடங்கியவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் மரபை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசையும், அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும் நடவடிக்கைகளில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆளுநரே இதுபோன்று நடந்து கொள்வது அரசியல் மாண்புகளுக்கு ஆளுநர் அவமதித்துள்ளார்.அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்கக்கூடிய எதிரானது.

அதேபோல் நேற்று ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும். அவர்கள் தான் உங்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று, கூட்டாட்சிக்கு விரோதமாக நிர்வாக ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளார். மட்டுமின்றி ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில் இருந்து தமிழ்நாடு என்கிற வார்த்தையையும், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையும் நீக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக இவ்வாறு செயல்படுவது என்பது சட்டவிரோதமானது. அரசியல், மத, சாதி, மொழி, பாலின ரீதியான பாரபட்சமற்ற நிலையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அரசியல் சாசன பதவியை வகிக்கிறேன் என்பதையும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதே தனது விசுவாசமும், உறுதிப்பாடும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் மறந்து விட்டார்.

ஆகவே, ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்." என தெரிவித்தார்.

****

Recent Posts