திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் மோசடி; ஏமாற்றப்பட்ட விஜயகுமார் புகார் மற்றும் பேட்டி
சென்னை, ஜூலை 22, 2022: திருவள்ளூர், ராஜாஜிபுரம், உ.வே சாமிநாதன் தெரு, எண்.43/ 371ல் வசிக்கும் விஜயகுமார் என்பவர் திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வீடுகட்ட கடன் பெற்று, கடனை திருப்பி செலுத்திய பிறகும் பத்திரம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளார். இது குறித்து இன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனக்கு பத்திரம் கிடைக்க உதவுமாறு கேட்டு கொண்டார்.
(நடுவில்) பாதிக்கப்பட்ட விஜயகுமார் |
அப்போது அவர் கூறியதாவது: விஜயகுமார் ஆகிய நான் ஏழ்மையான இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவன். திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வீடுகட்ட ரூபாய் 3,90,000 கடன் பெற்று அதில் ரூபாய் 3,12,000 திருப்பி செலுத்தி உள்ளேன்.
தமிழ்நாடு அரசின் OTS திட்டத்தின் கீழ் நான் கடனை திருப்பி செலுத்துவதற்கு கட்டவேண்டிய தொகை ரூபாய் 6,68,000 மட்டுமே ஆகும்.
இருப்பினும் எனது கடன் தொடர்பாக ரூபாய் 8,70,000 கட்டினால் பத்திரத்தை திருப்பி தந்து.விடுவதாக முந்தைய பதிவாளர் தெரிவித்திருந்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டு 5/3/2021ல் ரூபாய் 8,70,000 த்தை கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் செலுத்திவிட்டேன். எனினும் எனது பத்திரம் என்னிடம் திருப்பித் தரப்படவில்லை.
எனது பத்திரத்தை திரும்பப் பெற உதவுமாறு திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர் ஆனந்தனை நான் அணுகினேன். அப்போது அவர் அரசின் OTS சலுகை வாய்ப்புகளை மறைத்து, கந்துவட்டியாக ரூபாய் 30 லட்சம் கணக்கிட்டு அதில் சலுகைகள் போக 18 லட்சம் ரூபாய் கட்டுமாறு என்னிடம் தெரிவித்தார். வெறும் 3,90,000 கடனுக்கு, அவர் கந்து வட்டியாக 30 லட்சம் ரூபாய் கணக்கிட்டது என்பது உலகத்திலேயே எந்த பொதுநல சங்கத்திலும் நடக்காத ஓர் அநியாயம் ஆகும்.
இப்படி கந்து வட்டி கணக்குப் போட்ட சங்கச் செயலாளர் ஆனந்தன், 26 உறுப்பினர்களின் OTS சலுகை தொகையான 68 லட்சம் ரூபாயை தானே பெற்றுக்கொண்டு சலுகையை உறுப்பினர்களுக்கு கொடுக்காமல் ஊழல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சங்க பதிவாளர் AD பாஸ்கரன் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், OTS சலுகை தொகையில் ஊழல் புரிந்த சங்கச் செயலாளர் ஆனந்தனுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்.
நான் வேறு வழியின்றி, இந்த அநியாயமான ஊழலுக்கு அப்பட்டமாக துணை போகும் கூட்டுறவு சங்க பதிவாளர் AD பாஸ்கரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்திருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை கூட்டுறவு வீட்டு வசதி சங்க பதிவாளர் பாஸ்கரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த அநியாயத்தை யாராவது தட்டி கேட்க மாட்டார்களா என்ற ஆதங்கத்துடன் தமிழக முதலமைச்சரின் அலுவலகம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட இடங்களில் புகார் மனு கொடுத்தேன்.
இந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், 4/5/22 அன்று கூட்டுறவு சங்க பதிவாளர் AD பாஸ்கரன் அவர்களிடம் நானே நேரடியாக சென்று எனக்கு அரசின் OTS விதிகளின்படி செட்டில்மென்ட் நிர்ணயித்து நியாயம் வழங்க வேண்டி பணிவோடு கோரிக்கை வைத்தேன். அப்போது எனது நண்பர் தேவராஜ் உடனிருந்தார்.
அரசு ஆணைப்படி நியாயம் வழங்க மறுத்துவிட்ட, வீட்டு வசதி சங்க பதிவாளர் AD பாஸ்கரன், என்னை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி கடுமையாக திட்டினார். 'என் மீதே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துவிட்டு இப்போது என்னிடமே கோரிக்கை வைக்க வருகிறாயா' என்று அவர் மிகக் கோபமாகப் பேசினார். 'உனக்கு வக்கு இருந்தால் 30 லட்சம் ரூபாயை கட்டுஅல்லது கோர்ட்டுக்குப் போய் பார்த்துக்கொள்' என்று சாதிப் பெயரைச் சொல்லி கேவலமாக திட்டிப் பேசி என்னை வெளியே அனுப்பினார்.
அவமானப்படுத்தப்பட்டு வெளியே வந்த நான் வேறுவழியின்றி, வீட்டு வசதி சங்க பதிவாளர் AD பாஸ்கரன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 5/5/22 அன்று புகார் மனு கொடுத்தேன்.
எனது கோரிக்கை மனுவை ஏற்ற தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், எனது மனு மீது விசாரணை நடத்துமாறு வீட்டுவசதி துறை முதன்மைச் செயலாளருக்கும் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும் பரிந்துரை செய்தது.
இதையடுத்து வீட்டு வசதி சங்க பதிவாளர் AD பாஸ்கரன் மீதான தீண்டாமை - வன்கொடுமை புகார் குறித்து விசாரணை நடத்த திரு சரவணவேல்ராஜ் ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் AD பாஸ்கரனின் செல்வாக்கு காரணமாக அந்த விசாரணை கண்துடைப்பு விசாரணையாகவே நடத்தப்பட்டது. காவல்துறை தரப்பிலும் இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுகிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தில் 30 ஆண்டுகளாக நான் ஒரு கட்சி உறுப்பினராக பணியாற்றி வந்துள்ள போதும், தளபதியின் ஆட்சியில் எனக்கு நியாயம் கிடைக்காதது குறித்து மிகவும் மனம் உடைந்துபோனேன். தற்கொலை முடிவுக்குக் கூட நான் தள்ளப்பட்டேன். எனது நண்பர்கள் தான் என்னை காப்பாற்றி முதல்வரிடம் நியாயம் பெற்றுத் தர உறுதி அளித்திருக்கின்றனர்.
எனது கோரிக்கைகள் நிறைவேற உதவுமாறு உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
1. தமிழக அரசின் OTS சலுகை திட்டத்தின் கீழ் நான் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு.வேண்டிய தொகையான ரூபாய் 6,68,000 மட்டுமே பெற்றுக் கொண்டு என்னுடைய வீட்டு பத்திரத்தை நான் திரும்பப் பெறுவதற்கு எனக்கு உதவ வேண்டும்.
2.OTS சலுகை திட்டத்தில் அப்பட்டமான ஊழல் நடத்தி, திருவள்ளூர் வீட்டு வசதி சங்க செயலாளருக்கு கூட்டு களவாணி ஆக செயல்படுபவரும், சாதி ஆதிக்க வெறி பிடித்தவருமான கூட்டுறவு வீட்டுவசதி சங்க பதிவாளர் AD பாஸ்கரன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
****