மே 26-ல் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்


சென்னை, மே 13, 2022: மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  தலைவர் N.L.சீதரன் தலைமையில் மே 26-ல் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடப்பது குறித்து இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பொதுச்செயலர் K.ராகவேந்திரன் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youtube Video 👇👇
அப்போது அவர் பேசியதாவது:

1. அரசு கைகழுவும் போக்கு:
தமிழகத்தில் மாநில அரசு சார்பில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் அரசுப் பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்கி வருகின்றன. இக்கழகங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஊழியர்களாவர். 85,000 ஓய்வூதியர்கள் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஓய்வூதியம் பெற்றுவருகின்றனர் அனைவருக்கும் அரசு ஓய்வூதியம் அளிக்கும் என்பது தான் தனியாரிடமிருந்து தேசிய மயமாக்கப்பட்ட பொழுது தமிழக அரசு அளித்து வாக்குறுதியும் உறுதிமொழியுமாகும். இன்று மாநில அரசே அந்த வாக்குறுதியை மீற முயல்வது அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஊழியர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாகும்.


சமீபத்தில் அரசு சார்பில் தங்களுக்கு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் பல நீதிமன்ற வழக்குகளின் போது அரசுப் போக்குவரத்துச் செயலர் நேரடியாக ஆஜராகி உறுதிமொழிகள் கூறவேண்டிய அவசியம் என்ன என்பதை அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசுப் போக்குவரத்து நிர்வாகமும் சமீபத்தில் வருமான வரித் துறையால் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள ட்ரஸ்டும் தான் அரசுப் போக்குவரத்தின் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பென்ஷன் அளிக்கும் பொறுப்பில் உள்ளது என்று கூறுவது "ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் அளிக்கும் தன் பொறுப்பை மாநில அரசு தட்டிக்கழிக்க எத்தனிக்கிறது" என்று தான் பொருள். இது அரசு மேற்கொள்ள முயலும் ஓய்வூதியர் விரோத செயல் மற்றும் ஊழியர் விரோத செயல் ஆகும். இந்தப் போக்கை நிச்சயம் எவராலும் ஏற்க இயலாது, ட்ரஸ்ட் மூலம் பென்ஷனை வழங்குவது வேறு விஷயம்; ஆனால் ட்ரஸ்டுக்குத் தடையில்லாமல் பணம் கிடைப்பதை உத்தரவாதம் செய்யவேண்டியது மாநில அரசு தான். காரணம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கொள்கை முடிவுகளை உருவாக்குவதும் அறிவித்து நடைமுறைப்படுத்துவதும் மாநில அரசு தான். தன்னிச்சையாக நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்க இயலாது.

எனவே, பென்ஷன் அளிக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மாநில அரசு முயன்றால் அதற்கெதிரான அனைத்துப் போராட்டங்களிலும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் மாநிலம் முழுவதுமுள்ள மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களைத் திரட்டி ஆதரவாக நிற்போம் என்பதை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உறுதியாகச் சொல்ல விரும்புகிறோம்.

2. பல ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி:
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 77 மாதங்களாக அகவிலைப்படி உயர்வுகள் வழங்கப்படவே இல்லை. கடந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி வழங்கப்படாத கொடுமையை இப்பகுதி ஓய்வூதியர்கள் ஏற்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். 2015-ம் ஆண்டிற்குப் பின் அகவிலைப்படி உயர்வுகள் வழங்கப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஏறிய விலைவாசியினால் உருவான அனைத்து அவதிகளையும் கழகப் போக்குவரத்து ஓய்வூதியர்களின் குடும்பங்கள் சுமந்து நிற்கின்றனர் என்று தானே அர்த்தம். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒய்வூதியர்களுக்கும் கொரோனா காரணத்தால் 3 தவணை அகவிலைப்படிகள் மட்டுமே முடக்கப்பட்டன; பின்னர் நிலுவைத்தொகை வழங்கப்படாவிடினும் நடப்பு காலத்திற்கு 1.7.2021 முதல் அந்த 3 தவணை அகவிலைப்படிகளும் கூட வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டுக்கணக்காக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது. இதற்கெதிராக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியர்கள் பல இயக்கங்களையும் நடத்திவிட்டனர். ஆனால் நியாயம் கிட்டவில்லை.

3. ஓய்வூதியம் ஓய்வு பெற்றபின் பல ஆண்டுகளாக நிலுவை:
பொதுவாக ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கு ஒய்வூதியம் வழங்கப்படுவது மரபு, ஊதியம் பெறாத நிலையில் ஓய்வூதியம் மட்டுமே அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும். ஆனால் அரசுப்போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பணி ஓய்வு பெற்ற பின் பல ஆண்டுகளாக முழுமையான ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பல ஓய்வூதியர்களுக்குத் தவணை முறையில் பென்ஷன் நிலுவை வழங்கப்படுகிறது. இதனால் தெருக்களில் வீசப்பட்டுள்ள ஓய்வூதியர்களுக்கு அரசு என்ன பதில் கூறுகிறது. சட்டப்பேரவை உறுப்பினராக ஒரு நாள் இருந்துவிட்டால் கூட அவருக்கு அரசு பென்ஷன் முழுமையாக வழங்கப்படும் நிலையில், பல ஆண்டு காலம் கடுமையாக போக்குவரத்துத் துறையில் பணியாற்றிப் பின் பணி ஓய்வு பெற்ற இப்பிரிவு சார் ஓய்வூதியர்களுக்குப் பல ஆண்டு காலம் ஓய்வூதியம் வழங்கக் கூட மறுக்கும் நிலையை எப்படி ஏற்பது?

உடனடியாக அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டிய பென்ஷன் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று போராடி வரும் கழக ஓய்வூதியர்களின் கோரிக்கையை வேடிக்கை பார்ப்பது அரசுக்கு அழகல்ல. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்றே முழுமையான அளவில் பென்ஷனும் அகவிலைப்படியும் வழங்கும் வகையில் தேவையான நிதி ஆதாரத்தை பட்ஜெட்டில் ஒதுக்கித் தருவது மாநில அரசின் கடமை என்று வலியுறுத்த விழைகிறோம்.

4. மருத்துவ வசதி மறுக்கப்படும் அவலம்:
கொரொனா பெருந்தொற்று ஏற்படுத்தி வரும் உலகளாவிய அவலத்தால் மருத்துவ சிகிச்சையை நாடும் அவசியத்தில் அனைவரும் உள்ளோம் என்பது ஒருபுறம். மறுபுறம் வழக்கமான உடல் நோய்களால் அவதியுறும் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதும் மிக அவசியம். ஆனால் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய மெடிகல் இன்ஷ்யூரன்ஸ் வசதியை அடியோடு கழக ஓய்வூதியர்களுக்கு மறுப்பது நியாயமான செயலே அல்ல. மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் 100/- மருத்துவப்படியை குறைந்தது மாதம் 300/- ஆக உயர்த்தி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கவேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு அடியோடு இந்த மருத்துவப் படி மறுக்கப்படுகிறது. இதுவும் நியாயமல்ல. அனைவருக்கும் மருத்துவப்படி தொகையை மாதந்தோறும் பென்ஷனுடன் சேர்த்து வழங்கப்படவேண்டும். உரிய மாற்றங்களுடன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடன் அமலாக்க வேண்டும் என்பது ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களின் அடிப்படையான கோரிக்கை.

5. குடும்பப் பாதுகாப்பு நிதி எங்கே?
ஓய்வு பெற்ற பின்னர் பென்ஷன் நிலுவை, ஓய்வு காலச் சமூகப் பாதுகாப்பு நிலுவை என்பது ஒரு புறமிருக்க, இறந்து போகும் ஒய்வூதியர்கள் குடும்பங்கள் உடனடி செலவினங்களை எதிர்கொள்ள வழங்கப்படும் 50,000 பாதுகாப்பு நிதி மாநிலம் முழுவதும் உள்ள கழக ஓய்வூதியர்களுக்கு விரிவுபடுத்த வேண்டியது மிக அவசியக் கடமை. இதனைச் செய்யாமல் அரசு வேடிக்கை பார்ப்பது இப்பகுதி ஒய்வூதியர் குடும்பங்களை அவதியுறு வைக்கும் மனிதாபிமானமற்ற செயல் என்பதால் மாநில அரசு உடனே தனது கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

6. நீதிமன்றத் தீர்ப்புகளை காற்றில் பறக்க விடுவதா?
பாதிக்கப்படும் ஓய்வூதியர்கள் பல சமயம் நீதிமன்றங்களை நாடித்தான் நியாயம் பெற வேண்டிய அவல நிலை உள்ளது. ஆனால் ஒரு முறை ஒரு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எல்லாக் காலத்திற்கும் அமலாக்க வேண்டும் என்பது சட்டம், ஆனால் மாநில அரசு நீதிமன்றத் தீர்ப்புகளை முறையாக அமலாக்க மறுப்பதும்'; தீர்ப்பு வெளிவந்த சில காலத்திற்கு அமலாக்குவது போல் அமலாக்கிவிட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போல் செயல்படுவதும் வேதனையான உண்மை. அனைத்து நீதிமன்றத் தீர்ப்புகளையும் கறாராக அமலாக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்துகிறோம்.

7. புதிய ஓய்வூதியத் திட்டம் வேறா?
இந்நிலையில் மாநில அரசு 01.04.2003 முதல் புதிய பென்ஷன் திட்டத்தை அமலாக்கிவருகிறது. பழைய ஒய்வூதியர்களுக்கே முறையான பட்டுவாடாவை உத்தரவாதம் செய்ய இயலாத அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை வேறு அமலாக்கியுள்ளது. பல ஆயிரம் ஊழியர்கள் இந்த NPS திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். NPS திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றால் அவர்களுக்கு கிடைக்கும் பென்ஷன் மிக சொற்பம். தங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று வழிதெரியாத முறையில் தான் NPS திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள் தவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்பது இன்றைய தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி. அதை முழுமையாக அமல்படுத்தி ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் போல் தமிழக அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்து விரும்புகிறோம். தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்பதையும் நினைவு படுத்த விழைகிறோம். NPS ரத்து செய்வதும், அனைவரையும் பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதும், அனைவருக்கும் மாதம் முதல் தேதி எந்த நிலுவையும் இன்றி பென்ஷன் மற்றும் அகவிலைப்படிகளை வழங்குவது மாநில அரசு உத்தரவாதம் செய்ய வேண்டிய கடமை.

8. குறைந்த பட்ச ஓய்வூதியம் உத்தரவாதம் செய்க
கழக ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷனாக இன்னமும் மாதம் 3050/- வழங்கப்பட்டு வருகிறது, இது சமீபத்திய ஊதியக் குழு திருத்தத்திற்குப்பின்பு மாற்றி உயர்த்தி அமைக்கப்பட்ட குறைந்த பட்ச ஓய்வூதியத் தொகையை மறுப்பதாகும். மத்திய அரசில் குறைந்த பட்ச பென்ஷனாக மாதம் ரூபாய் 9000 வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசில் மாதம் ரூபாய் 7850/- வழங்கப்பட்டு வருகிறது. இத் தொகையை உத்தரவாதம் செய்து பணி ஓய்வு பெறும் அனைத்து கழக அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மாதம் 7850/- குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. குறைந்த பட்ச ஓய்வூதிய நிர்ணயம் கூட இன்றி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் வாழ்க்கை நடத்த இயலாமல் தவிப்பதை மாநில அரசு கணக்கில் கொண்டு விரைந்து உரிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் என்று கோருகிறோம்.

9. புஸ்வானமான மானியக் கோரிக்கை - 12.05.2022 பேச்சுவார்த்தை குறித்த மாபெரும் எதிர்ப்பார்ப்பு:
4.5.2022 அன்று தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் விதம் உரிய நிதி ஒதுக்க மானியக் கோரிக்கை விவாதம் பயனளிக்கும் என்ற அனைவரின் எதிர்ப்பார்ப்ப்பு புஸ்வானமாகிப் போனது. இந்நிலையில் 12.05.2022 அன்று மாநில அரசு அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக செய்தி கிடைத்துள்ளது. பல்வேறு ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியர் கோரிக்கைகளை பிரதானப்படுத்தி வருவதால் நிச்சயம் அவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போன்ற உறுதிமொழிகள் அரசுத் தரப்பில் வழங்கப்பட்டுவருகின்றன. எனவே 12.05.2022 பேச்சுவார்த்தையில் இத்தரப்பு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஒருவேளை 12.05.2022 பேச்சுவார்த்தையும் புஸ்வானமாகிப் போனால் அனைத்து ஓய்வூதியர்களின் ஆதரவு நடவடிக்கைகள் தேவை என்ற உணர்வின் அடிப்படையில் 6.5.2022 அன்று ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் தலைவர் N.L.சீதரன் தலைமையில் மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பு அலுவலகத்தில் கூடி விவாதித்து பின்கண்ட ஆதரவு நடவடிக்கைகளை முதற்கட்டமாக இறுதிப்படுத்தியுள்ளோம்.

10. ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவு நடவடிக்கைகள்:
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கழக போக்குவரத்து ஓய்வூதியர்களும்.குடும்ப ஓய்வூதியர்களும் இவ்வாறு தங்கள் நியாயமான பல கோரிக்கைகளுக்காக அல்லல் பட்டு போராடி வருவதை மாநிலத்தில் உள்ள இதர மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஒய்வூதியர்கள் அமைப்பு வேடிக்கை பார்க்காது. சமீபத்திய கழகங்களின் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மேற்கொண்ட தொடர் தர்ணா உள்ளிட்ட இயக்கங்களுக்குப் பின்னும் கோரிக்கைகளைத் தீர்க்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காலதாமதம் செய்து வருவதையும்; பென்ஷன் வழங்கும் தன் பொறுப்பையே தட்டிக் கழிக்க முனையும் விதத்தில் பேசிவருவதையும் பரிசீலித்து அனைத்து ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்புக்குழு நீண்ட விவாதத்திற்குப் பின் கீழ்க்கண்ட மூன்று முடிவுகளை ஏகமனதாக எடுத்துள்ளது:

அ) ஊடக செய்தியாளர்களை அழைத்து 13.05.2022 அன்று செய்தியாளர் கூட்டத்தை நடத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் முழு ஆதரவை அரசுக்கு தெளிவுபடுத்துவது;

ஆ) 23.05.2022 அன்று தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை சார்ந்த ஓய்வூதியர்கள் அமைப்பின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை முதற்கட்டமாக நடத்துவது.

இ) மாநில அரசு மெத்தனப் போக்கை தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் இருந்து அனைத்து ஓய்வூதியர் அமைப்ப்புகளின் சார்பில் பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியர்களை சென்னையில் திரட்டி மாபெரும் பழிகிடத்தல் போராட்டத்தை நடத்தி நியாயம் கோருவது,

மாநில அரசு இப்பகுதி ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களையும் மனிதர்களாக மதித்துச் செயல்படவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அமலாக்கிவரும் மாநில அரசு தன் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் மாநில அரசு - இப்பகுதி பென்ஷனர்கள் மற்றும் குடும்ப பென்ஷனர்கள் பட்டுவரும் துன்பங்களை நீக்க விரைந்து செயல்பட வேண்டும் என்பதே தமிழ் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஒய்வூதியர்களின் அவா என்று கூறினார்.

****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮