தமிழ்நாடு அரசு சிறார்களுக்குக் கட்டாயக் கொரோனா தடுப்பூசி அளிக்கக்கூடாது மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
சென்னை, மார்ச் 25, 2022: இந்திய - தமிழ்நாடு அரசுகள் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் மக்களிடம் கட்டாயமாகத் திணிக்கப்பட்டு வருவதை எதிர்த்துப் போராடி வரும் பல்வேறு அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள “மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு”, தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசிக் கட்டாயமாக்கலுக்கு எதிராகப் போராடி வருகின்றது. இவ்வமைப்பின் சார்பில், இன்று (25.03.2022) காலை சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
Youtube Video👇👇
தடுப்பூசி குறித்து அரசுக்கு பரிந்துரை அளித்துவரும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Techinical Advisory Group on Immunization NTAGI)வின் பரிந்துரை பெறாமலேயே 15 வயதுக்குக் கீழ் இருக்கிற சிறார்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடுவது என இந்திய அரசு அறிவித்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
(L to R) சையத் அபுதாஹீர்; அக்குஹீலர் S.A.வசீர் சுல்தான்; கி.வெங்கட்ராமன், பொதுச்செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்; மருத்துவர் முகம்மது யூசுப்; அருணபாரதி |
ஏற்கெனவே செலுத்தப்பட்டுவரும் கோவேக்சின் தடுப்பூசி கூட இப்போது அதிகம் பரவிவரும் ஓமிக்ரானுக்கு எதிராக போதிய அளவு பரிசோதிக்கப் படவில்லை என வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், அரசு அமைத்த முக்கியமான மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையைப் பெறாமலேயே அவசர அவசரமாக சிறார்களுக்குக் கட்டாயத் தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன?
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய், மற்றும் தேசிய கொரோனா தடுப்புக் குழு உறுப்பினர் மருத்துவர் ககன்தீப் காங் போன்ற வல்லுநர்கள் சிறார்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதைவிட கடந்த 2021 திசம்பர் 30 அன்று, தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பர்கவா, 'அனைத்துக் கோவிட் தடுப்பூசிகளும் அவை இந்தியா, இசுரேல், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், சீனா ஆகிய எந்த நாட்டுச் சேர்ந்தவையாக இருந்தாலும், அவை முதன்மையாக நோயை மாற்றக்கூடியவை (Disease modifying). அவை தொற்றுநோயைத் தடுப்பதில்லை. நோய்த் தொற்றின் தீவிரம், மருத்துவமனையில் சேர்க்கப் படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றைத் தணிப்பதற்காக இவை முன்னெச்சரிக்கைத் தவணையாக வழங்கப்படுகின்றன” என்றார்.
இந்திய அரசின் மருத்துவ வல்லுநர்களின் கருத்தே இவ்வாறு இருக்க, உரிய மருத்துவக் குழுவின் பரிந்துரை பெறாமலேயே 15 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த இந்திய அரசு முடிவு செய்திருப்பது, கடும் கண்டனத்திற்குரியது!
இச்சூழலில், கொரேனா தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது தவறல்ல என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிடுவது கவலை அளிக்கிறது.
எனவே, மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு இந்திய அரசு சிறார்களுக்கான கட்டாயத் தடுப்பூசி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு சிறார்களுக்கு கட்டாயக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
இவ்வாறு ஐயா கி. வெங்கட்ராமன் கூறினார்.
****