SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம், புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் முக்கிய தீர்மானங்கள்


சென்னை, நவம்பர் 23, 2021: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில், அகில இந்திய பொதுச்செயலாளர் முகமது ஷஃபி வரவேற்புரை நிகழ்த்தினார் பொதுச்செயலாளர் முகமது இலியாஸ் தும்பே ஆண்டறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பொதுக்குழுவில் சர்வதேச மற்றும் இந்திய சமூக-அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக அடுத்த மூன்றாண்டுக்கான (2021-2024) புதிய அகில இந்திய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெற்றது.

Youtube Video👇👇
முன்னதாக பொதுக்குழுவில் துவக்க உரை ஆற்றிய அகில இந்திய தலைவர் எம். கே.பைஸி, வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போல், மக்கள் விரோத சட்டமான சிஏஏ-வையும் ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒன்றிய அரசு இயற்றிய அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில் இதை விட அதிகமான மக்கள் போராட்டங்களுக்கு நாடு சாட்சியம் வகிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
நாடு எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த பாரம்பரிய அரசியல் கட்சிகளால் முடியவில்லை. மக்களுக்கு எதுவும் செய்யாததால், பாஜக வகுப்புவாத அரசியலை கையில் எடுக்கிறது. அதனை வலுவாக எதிர்கொள்ளாதது எதிர்க்கட்சிகளின் கொள்கை விலகலாகும். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்த அவர், உ.பி.யில் யோகி ராமருக்கு சிலை அமைக்கும்போது, அகிலேஷ் பரசுராமருக்கு சிலை அமைக்கப்படும் என்று கூறுகிறார். பசுவிற்கு குளிரூட்டப்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டும் போது மனிதர்களுக்காக மருத்துவமனைகளையோ, பள்ளிகளையோ கட்டுவது பற்றி நாட்டில் எந்த விவாதமும் நடக்கவில்லை. அரசு பொதுச் சேவையில் இருந்து விலகி அனைத்து பொதுச் சொத்துகளையும் விற்கிறது.

பாஜக ஆட்சியில் நாடு பாதுகாப்பாக உள்ளது என்ற கூற்று வெற்றுத்தனமானது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. நாட்டின் நாலாம் பக்கங்களிலிருந்தும் அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துகின்றன. அண்டை நாடான சீனா நாட்டை ஆக்கிரமித்து இந்தியாவில் படையெடுத்து காலனிகளை உருவாக்குகிறது. இதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் ஒன்றிய பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக இருப்பதாக சங்பரிவார் மையங்கள் கூறுகின்றன. ஆனால், மோடியின் ஆட்சியில் போரில் இறப்பதை விட அதிகமாக ராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து சட்டங்களும் கூட்டாட்சி தத்துவத்தை நசுக்கி வருகின்றன. இது நாட்டின் உள்நாட்டு ஜனநாயகத்தை அழித்துவிடும் என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய அகில இந்திய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் இன்று (நவ, 23) நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக எம். கே.பைஸி
அறிவிக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக வழ.ஷர்புதீன் அகமது, முகமது ஷஃபி, பி.எம்.காம்ப்ளே, பொதுச்செயலாளர்களாக இலியாஸ் முகமது தும்பே, சீதாராம் கொய்வால், அப்துல் மஜீத் பைஸி, யாஸ்மின் ஃபரூக்கி, செயலாளர்களாக அல்ஃபோன்ஸ் ப்ரான்கோ, அப்துல் சத்தார், ரியாஸ் பரங்கிபேட், தைதுல் இஸ்லாம், பைசல் இஸ்ஸதீன், ரூனா லைலா, பொருளாளராக அப்துல் ரவூப் இந்தூர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களாக தெகலான் பாகவி, அப்துல் மஜீத், டாக்டர் மகமூத் ஆவாத் செரீப், அப்துல் வாரிஸ், பி.கோயா, நெல்லை முபாரக், ரிஸ்வான் கான், டாக்டர்
நிஜாமுதீன், அஸ்ரப் மௌலவி, பி.அப்துல் ஹமீது, ராய் அராக்கல், அப்துல் ஹன்னான், வழக்கறிஞர் கே.பி.எம்.சரீப், குல்ஜந்த் சிங், அஸ்ஃபாக் ஹூசைன், சதாசிவ் திரிபாதி, அசோக் ஜாதவ், சயீதா ஸாதியா, முகமது பாரூக், முகமது காமில், ஷஹீர் அப்பாஸ், உமர் ஃபாரூக், முகையதீன், முகமது அஸ்ரப், சி.பி.அப்துல் லத்தீப், வழ.ஷமீம் அக்தர், முனவ்வர் ஹூசைன் சதுர்வேதி, சஃபர் உபைத், கவுசர் பானு, முகைதீன் குஞ்சு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழுவில் பாஜக அரசின் ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும், அவர்களை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், வேளாண் சட்டங்கள் வாபஸ், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சிகளை மாநில அரசுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். பொருளாதாரப் பேரழிவுக்கு காரணமான தவறான மற்றும் ஆணவக் கொள்கைகளை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான நடைமுறை நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

வீழ்ச்சியடைந்த வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை புத்துயிர் பெறுவதற்கு நாட்டில் குறைந்தபட்ச வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் தோல்வியை தவிர்க்க, அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்தும் வெளியுறவுக் கொள்கைகளையும், அணுகுமுறையையும் ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். 

வர்ணாசிரம அடிப்படையில் கல்வியில் ஏழை, செல்வந்தரிடையே பாகுபாட்டையும், கல்வியை தனியார்மயமாக்கல் செய்வதையும் ஊக்கப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். ரஃபேல் மற்றும் பி.எம். கேர். நிதி ஊழல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும். 

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் விகிதாச்சார பிரதிநித்துவத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் மாநாட்டின் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அம்சங்களை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும். 

உன்னத கொள்கை, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியே உண்மையான அரசியல் மாற்று சக்தி. ஆகவே எஸ்.டி.பி.ஐ. கட்சியை நோக்கி மக்கள் அணி திரள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮