பட்டியலின பழங்குடியின துணைத்திட்டத்தை தனி சட்டமாக அரசு இயற்றவேண்டும்: விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
சென்னை, செப்டம்பர் 6, 2021: விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் இன்று 2021- 2022 தமிழக அரசின் ஆதிதிராவிடர் நிதிநிலை அறிக்கை பற்றி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
Youtube Video👇👇
அரசின் ஆதிதிராவிடர்களுக்கான வரவு செலவுத் திட்டம் என்பது பொருளாதார அரசியல் மேதைகள் மட்டுமே மேலிருந்து முடிவு செய்யப்படுவது அல்ல. வெகுஜன மக்களின், அதாவது பயனாளிகளின் கோரிக்கைகள் விருப்பங்கள் அவர்களின் சூழல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இயற்றப்படுவது சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருக்கமுடியும். அந்த அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி அது எப்படி ஆதிதிராவிடர் வகுப்பினர்களுக்கு சென்று சேர்வதில்லை. அந்த நடைமுறையை எப்படி மாற்றவேண்டும், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும், மேலும் என்னென்ன திட்டங்களுக்கு செலவிட்டால் ஆதிதிராவிட மக்களின் நிலை முன்னேறும் என்ற அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து இருப்பதாக கூறினார்.
அப்போது அவர் பேசியதாவது:
* பட்டியலினத்தவரின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை 21 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும்.
* 2010ல் அறிவிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினருக்கான 27,000 பின்னடைவு காலிப் பணியிடங்கள் அரசாணை போடப்பட்டு உடனடியாக நிரப்பப்படவேண்டும்.
* பட்டியலின பழங்குடியின துணைத் திட்டத்திற்கு சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றப்பட்டு அதற்கான விதிகளை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்.
* பட்டியலின பழங்குடியினருக்கு துணைத் திட்டத்திற்கான தனி பட்ஜெட் நிறைவேற்றவேண்டும்.
* நிதியாண்டு துவங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே பட்டியல் சாதி பயனாளிகளுக்கு பயன் தரும் வகையில் துணைத் திட்டத்தை செயல்படுத்த அனைத்து துறைகளிடமிருந்து பெறப்பட்ட துணைத் திட்ட ஆண்டறிக்கையை (Annual report) ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படவேண்டும்.
* தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பழங்குடியின போலி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதியின் தீர்ப்பின் அடிப்படையில் இரத்து செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போலி சான்றிதழை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும்.
* அரசாணை 92ன் கீழ் நிகர்நிலை பல்கலைகழகங்களில் (Deemed university) பயிலும் பட்டியலின பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை வழங்கப்படவேண்டும்.
* அயல்நாடு சென்று உயர்கல்விப் பயில வழங்கப்படும் உதவித்தொகை நடப்பாண்டில் பட்டியலின பழங்குடியின் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 200 பேருக்கு வழங்கப்படவேண்டும். இதற்கான ஆண்டு வருமான வரம்பினை ருபாய் பத்து இலட்சமாக உயர்த்தவேண்டும்.
* தாட்கோவில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் மானியத்தொகை 50 சதவீதமாக உயர்த்தப்படவேண்டும்.
* நிலமற்ற ஏழை பட்டியலின விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நன்செய் அல்லது 3 ஏக்கர் புன்செய் நிலம் 100 சதவீத மானியத்துடன் வழங்கவேண்டும்.
* பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டமான சேலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கல்வியியல் கல்லூரி (B.Ed college) துணைத் திட்ட நிதியிலிருந்து பழங்குடியினருக்காக தொடங்கப்படவேண்டும்.
* ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். நல விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் செயல்படுத்தவேண்டும்.
* ஆதிதிராவிட நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை கண்காணிக்கும் வகையில் தனியாக இயக்குனர் ஒருவரை நியமிக்கப்படவேண்டும்.
****