வைகோ பேட்டி: திமுக கூட்டணியில் மதிமுக தனி சின்னத்தில் போட்டி - மக்கள் நலக்கூட்டணி உருவாகாது

சென்னை 01, ஜனவரி 2020: திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார் வைகோ. கூட்டணி கட்சியினரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணத்திற்கு செக் வைக்கும் வகையில் பேசியுள்ளார் வைகோ

Video Link👇

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டசபைத் திமுக கூட்டணியில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தார்.

ரஜினி கட்சி தொடங்குவதற்கு தொடங்குவது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கூற முடியாது. 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்றும் வைகோ கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தை காயப்படுத்தும் வகையில் யார் மீம்ஸ் போட வேண்டாம் என்றும். நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் உள்ளிட்டோர் மீது அவர்களது குடும்பத்தினர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திராவிட இயக்கங்களை சிதைக்க சில சக்திகள் முயற்சிப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.

இந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமையுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றும் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாகவும் அப்போதுதான் தனித்தன்மையை நிரூபிக்க முடியும் என்றும் கூறினார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் சட்டசபைத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று புத்தாண்டு தினத்தில் வைகோ தனது முதல் குரலை பதிவு செய்து உள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டசபைத்தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனும் தனது தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று கூறி வருகிறார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் மூன்றாவது அணி உருவானது. மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி உருவானது.

வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இக்கூட்டணி மாற்று அரசியலுக்கான முயற்சி என்று பேசப்பட்டது. வைகோ அல்லது திருமாளவன் தலைமை ஏற்பார் என்று நினைத்த நிலையில் இந்த கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இந்த கூட்டணி அந்த தேர்தலில் படு தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உட்பட அனைவருமே டெபாசிட்டை பறிகொடுத்தனர். விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கமாக புத்தாண்டு தினத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார். சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் காலமாக இருந்தால் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடுவார். இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தனிச்சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்றும் உறுதியாக கூறியுள்ளார். கூட்டணி கட்சியினருக்கு தனி சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதி அளிக்காவிட்டால் விசிக, மதிமுக போன்ற கட்சியினரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது போக போக தெரியும்.

****




Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴