ரெட்டி இளைஞர் பேரவை: தமிழகத்தில் ரெட்டியார் சமுதாய மக்கள் சார்பாக வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலிவுறுத்தல்

சென்னை, டிசம்பர் 10, 2020: தமிழ்நாட்டில் உள்ள 40 லட்சம் ரெட்டியார்கள் அனைவரும் மொழி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள்.


ஓ.பி.ஆர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலைஅமைக்கவேண்டும்:

மறைந்த உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க போவதாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு 40 லட்சம் ரெட்டியார் சமூக மக்கள் சார்பில் முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஓ.பி.ஆர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கவேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் பசிக்கு அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவது போல இந்த அரசு எங்களின் கோரிக்கையை கண்டும்,காணாமல்கைகழுவிட்டிருக்கிறது. எனவே உடனடியாக உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் ழுமு உருவ வெண்கலச் சிலையை வரும் 2011 பிப்ரவரி முதல் தேதி அவரின் பிறந்த நாளைக்கு முன்னதாக நிறுவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகள், கொண்டாரெட்டி, கொண்ட காப்பு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் 

  • 32 உட்பிரிவைக் கொண்ட ரெட்டியார்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் "கொண்டாரெட்டி, கொண்டகாப்பு" என்பவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அரசாணை எண் 2137 நாள் 11.11.1989 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடிதம் எண் 8017/ADW-II/91-3 படி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கஞ்சம்பட்டி மக்களுக்கு சாதிசான்றிதழ் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்

  • பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில்  அயோத்தி ரெட்டி, கோட்டை ரெட்டி, போகநாட்டு ரெட்டி, தேசூர் ரெட்டி, பொன்கலைநாட்டு ரெட்டி உள்ளிட்டவர்கள் “ரெட்டி, கஞ்சம்" பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். இவர்கள் தென்மாவட்டங்களில் எளிதாக தமக்குரிய சாதி சான்றிதழை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை வடமாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் அதற்கான சாதி சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட்டி கஞ்சம் சாதி சான்றிதழ் கிடைக்காமல் மறுக்கப்பட்ட இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலைக்கு போக முடியாமல் விரக்தியின் விளிம்பில் வாழ்க்கையில் பற்றற்று காணப்படுகின்றனர். இதற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை வழங்கிய GO MS No.541 Dated 24.7.1981 படி எங்கள் கோரிக்கை எளிதாக்கப்பட வேண்டும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் எங்களின் OBC கோரிக்கை:

  1. கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்த போது இரண்டு முறையும், செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ஒரு முறையும் மத்திய அரசுக்கு ரெட்டி கஞ்சம் பிரிவு மக்களை OBC பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தனர். 18.03.1998ல் ஒரு முறையும், 22.01.2015ல் இரண்டாவது முறையும் மத்திய அரசால் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்து OBC பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  2. OBC பட்டியலில் ரெட்டி கஞ்சம் மக்களை சேர்த்து விட்டோம், இது வரைவு கடிதம் என ஒரு துண்டு சீட்டைக் காட்டி அடுத்த வாரம் இதற்கான அரசாணை வெளிவரும் என்று தற்போதைய பா.ஜ.க மாநில செயலாளர் பேராசிரியர் இரா.சீனிவாசன் அவர்கள் எங்கள் மாநாட்டில் பேசினார். ஆனால் ஆண்டுகள் இரண்டு ஆயிற்று. எந்த அரசாணையும் வெளிவரவில்லை. இதுபோல் எல்லா வகையிலும் எங்கள் ரெட்டியார் சமுதாயம் ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வருகிறது. இதுவிஷயத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும்.

  • உயர்சாதி என்கிற அடிப்படையில் ஓ.சி (OC) என சில உட்பிரிவினர் அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் உள்ள ஏழைகள் அனைவரும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பெற முடியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிரிவில் உள்ள ஏழைகள் மத்திய அரசு அறிவித்துள்ள 10% இட ஒதுக்கீட்டை எதிர்பார்த்து தவிக்கின்றனர். இதுவிஷயத்தில் தமிழக அரசு முன்னுக்கு பின் முரணாக இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை என சான்றிதழ் வழங்கக்கூடாது என எந்தவித காரணங்களும் கூறாமல் கடந்த 04.06.2020 அன்று மாநில அரசு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதனை திரும்ப பெற வேண்டி எங்கள் அமைப்புகளில் ஒன்றான மூன்று மாநில ரெட்டி நலச்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்பின்னர் தான் EWS சுற்றறிக்கையை தமிழக அரசு கடந்த 09.07.2020 அன்று திரும்பப்பெற்றது. இவ்விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

நியமன உறுப்பினர்கள் பதவிகளில் எங்களுக்கு பிரதிநித்துவம் வழங்கவேண்டும்:-

  1. தமிழக அமைச்சரவையில் பிரதிநித்துவம் இல்லை:- கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் ரெட்டியார் சமுதாயத்திற்கு ஒருவருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை. (இடையில் ஓராண்டு பதவியில் இருந்தார் திரு.பாலகிருஷ்ண ரெட்டி) ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் இரண்டு பேர் தமிழக அமைச்சராகவும், ஒருவர் மத்தியிலும் மூன்று அமைச்சர்களை பெற்றிருந்த இந்த சமுதாயம் தற்போது பிரதிநிதித்துவம் இல்லாமல் தங்கள் குறைகளை, மனக்குமுறலை வெளியே சொல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
  2. உயர்நீதி மன்றங்களில் நீதிபதி எவரும் இல்லை:- சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 75. ஆனால் தற்போது 64 நீதிபதிகள் உள்ளனர். அண்மையில் 10 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதில் ரெட்டியார் சமுதாயத்திற்கு ஒரு நீதிபதி கூட வாய்ப்பு வழங்கப்படாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. எங்கள் சமூகத்திற்கு உரிய பிரதிநித்துவம் வழங்கிட வேண்டும்.
  3. பல்கலைகழகங்களில் துணைவேந்தர் பதவி வழங்க கோரிக்கை:- தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் நியமன பதவியான துணைவேந்தர் பதவிகளில் தற்போது ரெட்டியார் சமூகத்தில் ஒருவர் கூட இல்லை. எங்கள் சமூகத்தவரில் பலருக்கு இதற்கு தகுதிகள் இருந்தும் நியமிக்கப்படவில்லை என்பது ஆட்சியில் உள்ளவர்களால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவே கருத வேண்டியுள்ளது. 
  4. டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவி நியமனம் வழங்கவேண்டும்:- டி.என்.பி.எஸ்.சி, தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான ஆணையங்களில் கடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது என்பதை பதிவு செய்கிறோம். 

இது போன்று தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மிகவும் பாதிக்கப்பட்டு வேதனையில் உள்ள ரெட்டியார் சமுதாய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குபவர்களுக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!

Popular posts from this blog

Indian Coast Guard Veterans Welfare Association Marks 8th Raising Day | Launches New Flag & Website 2.0

5700 Brilliant Minds from India & 11 Countries Shine at SIP Abacus Prodigy 2025 Chennai Competition

Tamil Nadu's FIRST: Apollo Hospitals Launches Cutting-Edge Parkinson's & Deep Brain Stimulation (DBS) Centre!

Best of Best Conference & Awards 2025 | Celebrating 10 Years of Workplace Inclusion with BCWI

Bhagawan Sri Sathya Sai Baba Centenary Celebrations at Advocate M.K. Govindan's Residence; 317th Study Circle