கடை வாடகைக்கு வசூலிக்கப்படும் 18% GST வரியை திரும்பப் பெற தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கோரிக்கை
20.11.2024: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார் வணிகர்களை பாதிப்பிற்குள்ளாகும் வாடகைக்கு 18% GST வரியை திரும்பப் பெற வேண்டும் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். அவருடன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது அவர் கூறியதாவது: வணிகர்களை பாதிப்பிற்குள்ளாகும் வாடகைக்கு 18% GST வரியை திரும்பப் பெற வேண்டும். சமீபத்திய ஆய்வறிக்கையில் ஏறக்குறைய 56% வணிகத்தை ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சிறு வணிகத்தை அழிக்கும் முயற்சியாக இந்த வரி விதிப்பு அமையும்.
Press meet Youtube Video 👇
சிறு வணிகத்தை மேம்படுத்த எவ்வித முயற்சியை மத்திய அரசும் மாநில அரசும் எடுக்காத நிலையில் இதுபோன்ற வரி விதிப்புகள் மண்ணின் வணிகர்களுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டையே காட்டுகிறது. அமேசான் போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பொருளாதாரத்தை கைப்பற்றும் சூழ்நிலைக்கு நமது அரசே உதவுவது சரியானதல்ல. மின் கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றிற்கு எதிராக போராடியே எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் இன்னொரு போராட்டத்திற்கு வணிகர்களை தள்ளும் அவல நிலையைக் கண்டிக்கிறோம். இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கடையை வாடகைக்கு விடும் நிலை ஏற்படும்.
பல பட்டதாரி இளைஞர்கள் சரியான வேலை கிடைக்காமல், சிறு தொழில் செய்யும் இளைஞர்களை கார்ப்பரேட் அடிமைகளாக மாற்ற இதுபோன்ற வரிவிதிப்புகள் வழிவகுக்கும். உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ வேண்டுமென்றால், நமது வணிகத்தை நமது மண்ணின் வணிகர்கள் செய்தால் மட்டுமே அந்நிலையை அடைய முடியும். வணிகர்களுக்கு எதிரான இந்த வரிவிதிப்பிற்கு அரசியல் கட்சிகள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரிவிதிப்பை திரும்ப பெறாவிட்டால், மத்திய மாநில அரசுகளை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக போராட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீட், இந்தி திணிப்பு போன்றவற்றிற்கு எதிராக மத்திய அரசுக்கு குரல் கொடுக்கும் மாநில அரசு, இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுகிறோம் இன்று கூறினார்.
****