146 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து MBC 20% இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யாமல் இருக்க அரசை வலியுறுத்தி மாபெரும் பேரணி
சென்னை, செப்டம்பர் 6, 2021: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் MBC 20% இட ஒதுக்கீட்டில் அரசு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மருத்துவ இடங்கள் தொடர்ந்து கொள்ளை போவதைத் தடுக்கவும், சமூகநீதியைப் பாதுகாக்கக் கோரி சமூகநீதி ஒலி முழக்கம் செய்யவும் இன்று தமிழகத்தில் உள்ள 146 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்களும் இன்று காலை 10 மணி முதல் 1 மணிவரை சென்னை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி ஒலிமுழக்கப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழகம் முழுவதுமிருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள்.
Youtube Link👇👇
அப்போது அனைத்து மறவர் கூட்டமைப்பின் ஆலோசகர் C. விஜயகுமார் பேசியதாவது:
மக்கள் விரோத எடப்பாடி அரசு அரசியல் ஆதாயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான எக்கால சமீபகால சாதிவாரி சமூக, கல்வி நிலைகுறித்த புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 26.2 2021 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்கும் செயலாகும். சாதி வாக்குகளை வேட்டையாடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள திராவிடக்கட்சிகள் அச்சட்டம் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. அநீதியானது என்று தெரிந்திருந்தும் அனைத்து நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்தி அந்த அநீதியான சட்டத்தை நிலைக்கச் செய்ய, பகுத்தறிவைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பல தில்லுமுல்லு வேலைகளை திமுக அரசு செய்து அரசாணை 75/26.7.2021யை வெளியிட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் திறமையான ஏழை எளிய சமூகங்களின் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கவில்லை. இன்னும் மருத்துவ, பொறியியல் படிப்புக்களில் பெரும் பாதிப்புக்கள் வரவுள்ளது. ஏழை எளிய மக்களின் கடைசி பாதுகாப்பு அரணான நீதிமன்றமும் மக்களின் சமத்துவ உரிமையைக் காப்பதற்குக் கூட கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது.
எனவே, தமிழகத்தில் உள்ள 146 8C மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து இந்த பிற்போக்கான சட்டத்தை இறுதிவரை எதிர்ப்பது என்றும், சமூகநீதி சமீபகாலங்களில் சந்தித்துவரும் பல சவால்களை இணைந்து முறியடிப்பது என்றும் முடிவுசெய்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி முதல் முறையாக சமூகநீதி ஒலி முழக்க போராட்டத்தை சென்னை சின்னமலை (Little Mount) ராஜீவ் காந்தி சிலை அருகில் 6.9.2021 காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தி கோடி கையெழுத்து இயக்கத்தின் முதல் தொகுதியையும் சமூகநீதி கூட்டமைப்பின் கோரிக்கை அறிக்கையையும் அரசுக்கு சமர்ப்பிக்கவுள்ளோம். அரசு இந்த மாபெரும் வரலாற்றுப் பிழையை உடனே சரிசெய்ய வில்லையென்றால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரு கட்சிகளையும் வரும் தேர்தல்களில் முற்றிலும் புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
எனவே தமிழக அரசு எல்லாச் சமூகங்களையும் அழைத்து, கலந்து ஆலோசித்து, சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தி, அறிஞர்குழு முலம் ஆய்வு செய்து எல்லாச் சமூகங்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் வகுப்புவாரித் தொகுப்பு இடஒதுக்கீட்டு முறையை வகுத்துச் செயல்படுத்தும்வரை MBC 20% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்று அரசை வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம்.
****